
வைப்பார் கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் கிராமத்தில் ராஜ கம்பள மகாஜன சங்கம் சார்பில் பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 4 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இன்று ( ஜன.,4 ) நடைபெற்றது. இதில் பெரிய மாடு, சின்ன மாடு என இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
இந்த மாட்டு வண்டி எல்கை பந்தயத்தில் மதுரை, தேனி, சிவகங்கை, புதுக்கோட்டை, இராமநாதபுரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து வந்து காளைகள் கலந்து கொண்டன.
மேலும், வெற்றி பெரும் காளைகளுக்கு லட்சம் ரூபாயை பரிசாக வழங்கும் இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் மாட்டுவண்டி பந்தயம் என்பதால், வைப்பார் பந்தய களம் பந்தய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகவும், ஆவலாகவும் இருந்தது. எனவே வைப்பார் பந்தயத்தை காண தமிழகம் முழுவதும் ஏராளமான பந்தய ரசிகர்கள் வந்து குவிந்தனர். சாலைகளில் இருபுறமும் நின்று ரசிகர்கள், பொதுமக்கள் பலர் ஆரவாரத்தோடு பந்தயத்தை கண்டு ரசித்தனர்.
முடிவில் மாட்டுவண்டி பந்தயத்தில் வெற்றி பெற்ற மாட்டின் உரிமையாளர்கள், சாரதிகளுக்கு ஆடு, எல்இடி டிவி, பணம் உள்ளிட்ட பரிசு வழங்கப்பட்டது.