• vilasalnews@gmail.com

இது 18வது ஆண்டு... வேட்டி, சேலையோடு தூத்துக்குடி வந்த வெளிநாட்டினர்!

  • Share on

தூத்துக்குடியில் வெளிநாட்டினர் தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சேலை அணிந்து மண்பானையில் சர்க்கரைப் பொங்கல் வைத்து பொங்கல் பண்டிகையைக் கொண்டாடினர். 


சென்னையில் உள்ள “கிளாசிக் ரன்” என்ற தனியார் சுற்றுலா நிறுவனம் கடந்த 17 வருடங்களாக வெளிநாட்டினர் பங்குபெறும் “ஆட்டோ சேலஞ்ச்” என்ற ஆட்டோ சுற்றுலாப் பயணத்துக்கு ஏற்பாடு செய்து வருகிறது. இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட ஆட்டோ சேலஞ்ச்  சுற்றுலாப் பயணம் கடந்த 28 ஆம் தேதி சென்னையில் தொடங்கியது. 


இங்கிலாந்து, நியூசிலாந்து ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த 5 பெண்கள், 16 ஆண்கள் என மொத்தம் 21 பேர் கலந்துகொண்டு ஆட்டோவில் 9 அணியாகப் பிரிந்து 9 ஆட்டோக்களில் சென்னை, புதுச்சேரி, தஞ்சாவூர், மதுரை, ராஜபாளையம் வழியாக நேற்று தூத்துக்குடி வந்த நிலையில், இன்று (04.01.2025) சாயர்புரத்தில் உள்ள பண்ணை தோட்டத்தில் பொங்கல் கொண்டடுவதற்காக வந்தனர். 


இதற்காக, தோட்டம் முழுவதும் கரும்பு, மஞ்சள் குலை, வாழை தோரணங்கள் கட்டப்பட்டிருந்தன. ஆட்டோக்களில் தோட்டத்துக்கு வந்த அவர்களுக்கு மாலை அணிவித்து வரவேற்பு அளிக்கப்பட்டது. பின், அனைவரும் தமிழர்களின் பாரம்பரிய உடையான வேட்டி, சேலை அணிந்தனர்.


இதையடுத்து, அவர்களுக்கு பொங்கல் பானை, பச்சரிசி, நாட்டுச் சர்க்கரை ஆகியவை வழங்கப்பட்டு பொங்கல் வைத்தனர். பானையில் பொங்கல் பொங்கி வரும்போது, தோட்டத்தில் பணிபுரிபவர்கள் பொங்கலோ, பொங்கல் எனக் கூறினர். அதைப்பார்த்த சுற்றுலாப் பயணிகளும் பொங்கலோ பொங்கல் எனக் கோஷமிட்டு குலவை சத்தமும் எழுப்பி அசத்தினர்.


வெளிநாட்டினர் தமிழ் பாரம்பரிய முறைப்படி பொங்கல் பண்டிகை கொண்டாடியதை சுற்று வட்டார பகுதி மக்கள் திரண்டு வந்து பார்த்து ரசித்தனர்.

  • Share on

ஓட்டப்பிடாரம் அருகே விதிமுறைகளை மீறி வெட்டப்பட்ட செம்மர விவகாரம் : கோரிக்கை வைக்கும் சமூக ஆர்வலர்!

பட்டப்படிப்பு முடித்த ஆதிதிராவிடர், பழங்குடியின மாணவர்களுக்கான வாய்ப்பு இது... தூத்துக்குடி மாவட்டத்தினர் பயன்படுத்திக் கொள்ளுங்கள்!

  • Share on