
வைப்பார் கிராமத்தில் நடைபெற்ற மாட்டுவண்டி பந்தயத்தில் முதல் பரிசை பெற்று 2025 ஆம் ஆண்டின் முதல் லட்ச பரிசை தட்டிச் சென்ற காளைகள் என்ற பெயரை மதுரை மாவட்ட காளை பெற்றுச்சென்றது.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, வைப்பார் கிராமத்தில் ராஜ கம்பள மகாஜன சங்கம் சார்பில் பாஞ்சாலங்குறிச்சி மாமன்னர் மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு 4 ஆம் ஆண்டு மாபெரும் மாட்டு வண்டி பந்தயம் இன்று ( ஜன.,4 ) நடைபெற்றது. இதில் பெரிய மாடு, சின்ன மாடு, என இரண்டு பிரிவுகளாக மாட்டுவண்டி பந்தயம் நடைபெற்றது.
மேலும், லட்ச ரூபாயை பரிசாக வழங்கும் இந்த 2025 ஆம் ஆண்டின் முதல் போட்டி என்பதால், வைப்பார் பந்தய களம் பந்தய ரசிகர்கள் மத்தியில் மிகவும் பரபரப்பாகவும், ஆவலாகவும் இருந்தது. எனவே வைப்பார் பந்தயத்தை காண தமிழகம் முழுவதும் ஏராளமான பந்தய ரசிகர்கள் வந்து குவிந்தனர்.
இதனையடுத்து, முதலாவதாக நடைபெற்ற பெரிய மாட்டு வண்டி பந்தயத்தில் தமிழகம் முழுவதும் இருந்து வந்த மொத்தம் 12 ஜோடி காளைகள் கலந்து கொண்டன. இதில் பெரிய மாட்டில் முதலாவது பரிசு தொகை 1,11,266 ரூபாயை, சாரதி கோட்டையூர் கணேசன், பின்சாரதி சரவணன் ஆகியோர் ஓட்டி வந்த மதுரை மாவட்டம் அவனியாபுரம் எஸ்கேஆர் மோகன்சாமிகுமார் காளைகள் தட்டிச்சென்றன.
இதனால், 2025 ஆம் ஆண்டின் முதல் லட்ச பரிசை தட்டிச் சென்ற காளைகள் என்ற பெருமையை மதுரை மாவட்டம் அவனியாபுரம் எஸ்கேஆர் மோகன்சாமிகுமார் காளைகளும், அதனை ஓட்டிய சாரதிகள் என்ற பெயரை கோட்டையூர் கணேசனும், சரவணனும் பெற்றனர் என்பது குறிப்பிட தக்கது.