
இந்திய விடுதலைக்கு முதல் முழக்கமிட்ட பாஞ்சை மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் 266 வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்படுகிறது.
இதனை முன்னிட்டு, பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவுக் கோட்டையில் அமைந்துள்ள வீரபாண்டிய கட்டபொம்மனின் திருஉருவச்சிலைக்கு அரசு தரப்பில் ஓட்டப்பிடாரம் வட்டாட்சியர் மற்றும் பல்வேறு அரசியல் கட்சியினர், அமைப்பினர், கட்டபொம்மன் வம்சாவழியினர், பொதுமக்கள் உள்ளிட்ட பலரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தளபதி விஜய் ஆணைப்படி, பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வழிகாட்டுதலின் படி, மாமன்னர் வீரபாண்டிய கட்டபொம்மனின் பிறந்த தினத்தை முன்னிட்டு, பாஞ்சாலங்குறிச்சியில் அமைந்துள்ள அவரது திருவுருவச் சிலைக்கு, தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் தலைமையில் தமிழக வெற்றிக் கழகத்தினர் மாலை அணிவித்து புகழ் வணக்கம் செலுத்தினர். இதில் ஏராளமான தவெக நிர்வாகிகள், தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
அதே போல, தமிழக வெற்றிக் கழகத்தின் கொள்கைத் தலைவியும், இந்திய விடுதலைப் போராட்ட வீரமங்கையுமான வேலுநாச்சியார் பிறந்த தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி கே.டி.சி நகர் பிரதான சாலையில் அமைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் புகைப்படத்திற்கு தூத்துக்குடி மாவட்டப் பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செய்தார்.