
புதியம்புத்தூர் கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்துவது தொடர்பான ஆணையை தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.
புதியம்புத்தூர் ஊராட்சியை தரம் உயர்த்தி பேரூராட்சி ஆக்க வேண்டி ஓட்டப்பிடாரம் யூனியன் கூட்டத்தில் 06.08.2021 ம் தேதி ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இத்தீர்மானத்தை ஓட்டப்பிடாரம் யூனியன் 20வது வார்டு உறுப்பினர் க.நவநீத கிருஷ்ணன் முன்மொழிந்தார். 21 வது வார்டு உறுப்பினர் கணேசன் வழிமொழிந்தார். புதியம்புத்தூர் என்கிற ஒரே கிராமத்தில் ஒன்றுபட்ட இடைவிடாமல் உள்ள கிராமத்தில் சுமார்10 ஆயிரம் வாக்காளர்களுக்கு மேற்பட்டு உள்ளனர்.
இந்த கிராமத்தின் சில பகுதிகளை பிரித்து இராஜாவின் கோவில் ஊராட்சியிலும், சாமிநத்தம் ஊராட்சியிலும், ஓட்டப்பிடாரம் ஊராட்சியிலும் சேர்த்துள்ளனர். இதனால், ஒன்றுபட்டுள்ள கிராம மக்கள் புதியம்புத்தூர் பெயரைச் சொல்லி வாழும் மக்கள் மேற்படி மூன்று பஞ்சாயத்தில் இணைக்கப்பட்டுள்ளதால் அவர்கள் தங்கள் குறைகளை நிவிர்த்தி செய்ய 2 கி.மீ. தூரமுள்ள இராஜாவின் கோவில் பஞ்சாயத்துக்கும், 3 கி.மீ தூரமுள்ள சாமிநத்தம் பஞ்சாயத்துக்கும், 5 கி.மீ தொலைவில் உள்ள ஒட்டப்பிடாரம் பஞ்சாயத்துக்கும் அலையும் நிலையில் உள்ளனர். புதியம்புத்தூர் ஊராட்சியும் சேர்த்து மொத்தம் நான்கு பஞ்சாயத்து நிர்வாகம் ஒரே ஊரில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
மேலும், நான்கு கவுன்சில் வார்டுகள் புதியம்புத்தூர் வாக்குகளை பிரித்து நான்கு ஒன்றிய உறுப்பினர்கள் இந்த ஊரின் நிர்வாகத்தில் பங்கு கொள்கின்றனர். எனவே, உள்ளாட்சி நிர்வாகம் சரியான முறையில் செயல்பட ஒரே நிர்வாகத்தில் கொண்டுவந்து புதியம்புத்தூர் ஊராட்சியை தரம் உயர்த்தி பேரூராட்சியாக்க வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேற்றும் பொருட்டு அரசுக்கு பரிந்துரை செய்திட மன்றம் அங்கீகரிக்க ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தின், ஒன்றியக் குழுத் தீர்மானம் எண்: 294 நாள்: 06.08.2021 இன் படி அங்கீகரிக்கப்பட்டது.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதியம்புத்தூர் கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்துவது தொடர்பான ஆணையை தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உள்ளூர் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் செய்யப்படும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆடை உற்பத்தி (Garments) நிலையம், அதிகரிக்கும் மக்கள் தொகை. காரணமாக தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதியம்புத்தூர் கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்துவது அவசியமாகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
புதியம்புத்தூர் கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்துவது தொடர்பான ஆணையை தற்போது தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளதைத் தொடர்ந்து, பொதுமக்களும், உள்ளாட்சி பிரதிநிதிகளும் தமிழக அரசிற்கு நன்றி தெரிவித்து வருகின்றனர்.