
நகரமயமாதல் உள்ளிட்ட பல்வேறு காரணங்களின் அடிப்படையில் சேலம், கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு. கரூர், ஓசூர், மதுரை. திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஆவடி பெருநகர சென்னை மாநகராட்சி, கும்பகோணம், தஞ்சாவூர். தூத்துக்குடி மற்றும் சிவகாசி ஆகிய மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்தல் தொடர்பான உத்தேச முடிவு குறித்த ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளது.
தமிழ்நாடு சட்டப்பேரவையில், 2021-22 ஆம் ஆண்டிற்கான நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் மானியக் கோரிக்கையின் போது, பிறவற்றுடன் கீழ்க்காணுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது:-
2011 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இம்மாநிலத்தின் நகர்ப்புர மக்கள் தொகை 48.45 சதவீதம் ஆகும். 2021 ஆம் ஆண்டு தற்போதைய சூழலில் மொத்த மக்கள் தொகையில் நகர்ப்புர மக்கள் தொகை சுமார் 53 சதவீதமாக உயர்ந்துள்ளதென கருதப்படுகிறது. எனவே, மாநகராட்சிகள் மற்றும் நகராட்சிகளை ஒட்டியுள்ள நகர்ப்புறத் தன்மையோடு உள்ள பகுதிகளை நகர்ப்புறங்களோடு இணைத்து தேவையான கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்துவது இன்றியமையாததாகக் கருதப்படுகிறது.
தற்போது நகராட்சியாக உள்ள உள்ளாட்சி அமைப்புகளை மாநகராட்சியாகவும், பேரூராட்சிகள் மற்றும் ஊராட்சி அமைப்புகளை நகராட்சியாகவும், அதேபோன்றே மாநகராட்சிகள், நகராட்சிகளில் சிலவற்றை விரிவாக்கம் செய்திடவும் தொடர்ந்து கோரிக்கைகள் வந்தவண்ணம் உள்ளன.
தற்போதுள்ள நகர்ப்புற உள்ளாட்சிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில், நகர்ப்புரத்தன்மை, மக்கள் தொகை, மக்கள் தொகை அடர்த்தி, ஆண்டு வருமானம், பொருளாதார முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையிலும் நகர்ப்புறமாக மாறி வருகின்ற இந்த பகுதிகளிலும் நகரத்திற்கு இணையான அடிப்படை வசதிகளை அளித்திடும் நோக்கிலும் உள்ளாட்சி அமைப்புகள் தரம் உயர்த்தப்படுகிறது.
மேலும், உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு, அதாவது, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (in an efficient and comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள் ஆகியவற்றை கருத்திற்கொண்டு, அருகருகே அமைந்துள்ள ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளை இணைப்பதன் மூலம் புதிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குதல், எல்லைகளை விரிவாக்கம் செய்தல் போன்றவற்றை ஆய்வு செயற்குறிப்புகளை உருவாக்குதல், பரிந்துரைகளை அளித்தல் போன்ற பணிகளை செய்து தக்க மேற்கொள்ள ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் அவர்களின் தலைமையில் நகராட்சி நிருவாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் அரசு முதன்மைச் செயலாளர் உள்ளிட்ட உயர் அலுவலர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவொன்றை அமைத்து அரசாணையில் ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதனைத் தொடர்ந்து, உயர்நிலைக்குழு, பல்வேறு தேதிகளில் கூடி இப்பொருண்மைகள் மீது விரிவான ஆலோசனைகள்/விவாதங்களை மேற்கொண்டது. ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் மறுசீரமைப்பு, புதிய உள்ளாட்சி அமைப்புகளை உருவாக்குதல், உள்ளாட்சி அமைப்புகளின் எல்லைகள் விரிவாக்கம் தொடர்பாக, நகரமயமாதலின் வீச்சு, நிர்வாகத் தேவைகள், மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை திறம்படவும், முழுஅளவிலும் வழங்குதல் (in an efficient and comprehensive manner), உள்ளாட்சிப் பகுதிகளின் எதிர்கால வளர்ச்சிக்கான தேவைகள், உள்ளாட்சி அமைப்புகள் உள்ளிட்ட தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகள், ஊரக மற்றும் நகர்ப்புர உள்ளாட்சி அமைப்புகளின் பல்வேறு நிலைகளைச் சேர்ந்த அலுவலர்கள் போன்ற தொடர்புடைய அனைத்து தரப்பினரின் (Stakeholders) கோரிக்கைகள்/கருத்துகள் போன்றவை உயர்நிலைக்குழுவின் பல்வேறு கூட்டங்களில் ஆய்வு செய்யப்பட்டு, விவாதிக்கப்பட்டு பல்வேறு தற்காலிக செயற்குறிப்புகள் (Tentative Proposals) உருவாக்கப்பட்டன.
இதனடிப்படையில், இப்பொருள் தொடர்பான பல்வேறு பொருண்மைகள் குறித்து உயர்நிலைக் குழுவால் 18.12.2024 அன்று காணொளி வாயிலாக 28 மாவட்ட ஆட்சியர்களுடன் இறுதி ஆலோசனைகள் மேற்கொள்ளப்பட்டன.
அதன்படி, கோயம்புத்தூர், கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், ஓசூர், மதுரை, சேலம், திருச்சிராப்பள்ளி, திருப்பூர், ஆவடி, பெருநகர சென்னை மாநகராட்சி, கும்பகோணம், தஞ்சாவூர், தூத்துக்குடி மற்றும் சிவகாசி ஆகிய 16 மாநகராட்சிகளின் எல்லைகளை விரிவாக்கம் செய்வது குறித்து மேலே தொடர்புடைய மாவட்ட ஆட்சித் தலைவர்கள் செயற்குறிப்புகளை அரசுக்கு அனுப்பிவைத்துள்ளனர்.
மேலே உள்ளவைகளை குறிப்பிட்டு காட்டி, சில்லாநத்தம் ஊராட்சியில் சிப்காட் தொழிற்பூங்கா மற்றும் அறைகலன்கள் பூங்கா அமைவதன் மூலம் இவ்வூராட்சி தொழில்மயமாகி வருவதை எடுத்துக்காட்டுகிறது. மேலும், 2025 ஆம் ஆண்டு உற்பத்தியைத் தொடங்கவுள்ள வின்ஃ பாஸ்ட் மின்கல வாகனங்கள் தொழிற்சாலையின் மூலம் இப்பகுதியின் பொருளாதாரம் மற்றும் வேலைவாய்ப்பு அதிகரிக்கும். மேலும், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம், முள்ளக்காடு மற்றும் குமாரகிரி ஆகிய ஊராட்சிகள் தூத்துக்குடி மாநகராட்சிக்கு மிக அருகில் அமைந்துள்ளன. மேற்குறிப்பிடப்பட்டுள்ள 7 கிராம ஊராட்சிகளை தூத்துக்குடி மாநகராட்சியோடு இணைப்பதன் மூலம், அப்பகுதிகள் நீடித்த நகர்ப்புர வளர்ச்சி, மேலும் சிறப்பான நிருவாகம் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை பெறுவதற்கு ஏதுவாகும். எனவே சில்லாநத்தம், மாப்பிள்ளையூரணி, அய்யனடைப்பு, கோரம்பள்ளம், மறவன்மடம், முள்ளக்காடு மற்றும் குமாரகிரி ஆகிய ஊராட்சிகள் தூத்துக்குடி மாநகராட்சியுடன் இணைப்பது தொடர்பாக உத்தேச முடிவு குறித்த ஆணைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.