
திருப்பூர், தூத்துக்குடி, நாமக்கல், ஈரோடு. கோயம்புத்தூர், திருச்சிராப்பள்ளி, திருவள்ளூர், புதுக்கோட்டை, தரும்புரி, கிருஷ்ணகிரி, சிவகங்கை, இராமநாதபுரம், மயிலாடுதுறை மற்றும் சேலம் மாவட்டங்களில் உள்ள கிராம ஊராட்சிகளை 25 பேரூராட்சிகளாக தரம் உயர்த்துதல் தொடர்பாக உத்தேச முடிவு குறித்த ஆணைகள் தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.
அதன் படி, தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதியம்புத்தூர் கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்துவது தொடர்பான ஆணையை தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. அதில், உள்ளூர் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான வர்த்தகம் செய்யப்படும் குழந்தைகளுக்கான பிரத்தியேக ஆடை உற்பத்தி (Garments) நிலையம், அதிகரிக்கும் மக்கள் தொகை. காரணமாக தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள புதியம்புத்தூர் கிராம ஊராட்சி பேரூராட்சியாகத் தரம் உயர்த்துவது அவசியமாகிறது என தமிழக அரசு வெளியிட்டுள்ள ஆணையில் குறிப்பிட்டுள்ளது.
புதியம்புத்தூர்
தமிழகத்தில் ஆயத்த ஆடை உற்பத்தியில் திருப்பூருக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூர் இருந்து வருகிறது. ஒட்டப்பிடாரம் தொகுதிக்கு உட்பட்ட வானம்பார்த்த பூமியான புதியம்புத்தூரில் குடிசை தொழில் போல் எங்கு திரும்பினாலும் ஆயத்த ஆடை உற்பத்தி நடைபெறுகிறது.
மேலும், ஆயத்த தயாரிப்புக்கு தேவையான மொத்த ஜவுளி கடைகள், பட்டன், நூல் கண்டுகள் உள்ளிட்ட பொருட்களை விற்பனை செய்யும் கடைகளும் அதிகம்.
இதன் மூலம் சுற்றுவட்டார பகுதிகளான ஒட்டப்பிடாரம், கீழமுடிமண், வேலாயுதபுரம், கொம்பாடி, கச்சேரிதளவாய்புரம், இராஜாவின்கோவில், தட்டப்பாறை, சில்லாநத்தம், துரைச்சாமிபுரம், சில்லாகுளம், பாஞ்சாலங்குறிச்சி, சிலோன்காலனி, இந்திரா நகர், குலசேகரநல்லூர், புதுப்பச்சேரி, ஜம்முலிங்காபுரம், சாமிநத்தம், புதுக்கோட்டை, கோரம்பள்ளம் என 40-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த 15 ஆயிரம் குடும்பங்கள் வேலை வாய்ப்பை பெற்று வருகின்றனர்.