
தென் மாவட்டங்களிலேயே திண்டுக்கல்லில் தான் வெங்காயத்திற்கு என்று தனி சந்தை இரு இடங்களில் பிரம்மாண்டமாக உள்ளது. திண்டுக்கல் வெங்காய சந்தையானது திங்கள், புதன், வெள்ளி ஆகிய மூன்று தினங்களில் நடைபெறும்.
இந்தச் சந்தைக்கு திண்டுக்கல், வேடசந்தூர், ஒட்டன்சத்திரம், தேனி, கம்பம் ,தாராபுரம், உடுமலைப்பேட்டை, திருப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில் இருந்து விவசாயிகள் தங்கள் விளை நிலங்களில் வெள்ளாமை ஆகக் கூடிய வெங்காயங்களை இந்தச் சந்தைக்கு விற்பனைக்கு கொண்டு வருவது வழக்கம்
இங்கு வரக்கூடிய வெங்காயம் சென்னை, திருச்சி, தஞ்சை, கோவை, மதுரை, தூத்துக்கு உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கும் கேரளா, ஆந்திரா போன்ற வெளிமாநிலங்களுக்கும் சிங்கப்பூர், மலேசியா, இலங்கை போன்ற வெளிநாடுகளுக்கும் வியாபாரிகள் விற்பனைக்கு வாங்கி செல்வர். கடந்த மாதம் 350 டன் சின்ன வெங்காயம் வரக் கூடிய இடத்தில் வரத்து அதிகரித்து நாள் ஒன்றுக்கு 500 டன் சின்ன வெங்காயம் வருகை தந்ததால் ஒரு கிலோ சின்ன வெங்காயம் 30 ரூபாய் முதல் 80 ரூபாய் வரை விற்பனையானது.
இந்த நிலையில், தூத்துக்குடியில் கடந்த வாரத்தில் மார்க்கெட்டில் வெங்காய விலையில் ஒரு கிலோ சின்ன வெங்காயம் அதன் தரத்தை பொறுத்து கிலோ 30 முதல் 80 வரை விற்பனையானது. ஆனால் தற்பொழுது விற்பனைக்கு வரக்கூடிய சின்ன வெங்காயம் விளைச்சல் குறைந்து, வரத்து குறைவாக உள்ளதால் அதன் தரத்தை பொறுத்து தற்போது 80 முதல் 100 வரை விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சில்லறையில் 5 முதல் 10 வரை கூடுதலாக வைத்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
ஏற்கனவே கனமழை காரணமாக தக்காளி, பீன்ஸ், கேரட், கத்தரிக்காய் உள்ளிட்ட காய்கறிகள் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. வெங்காயத்தின் விலை ஏற்ற இறக்கமாக இருந்த நிலையில் தற்போது அதன் விலையும் உச்சம் அடைந்திருப்பது இல்லத்தரசிகளை கவலை கொள்ள வைத்துள்ளது. மேலும் வரும் நாட்களில் இன்னும் வெங்காயத்தின் விலை உயர்வதற்கே வாய்ப்பு இருப்பதாக கூறி அதிர வைக்கின்றனர் வியாபாரிகள்.