
மாணவிகள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்று போதையில் சிறார்கள் ரகளை செய்த சம்பவம் தூத்துக்குடியை அதிர்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறது.
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள கழுகுமலை - கோவில்பட்டி சாலையில், குமாரபுரம் பகுதியில் அரசு பிற்படுத்தப்பட்டோர் மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இங்கு கழுகுமலை மற்றும் அதன் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட பள்ளி, கல்லூரி மாணவியர்கள் தங்கி படித்து வருகிறார்கள்.
அரையாண்டு தேர்வு விடுமுறையை முன்னிட்டு, சில மாணவிகள் சொந்த ஊர் சென்றுள்ளனர். இதனால் விடுதியில் தற்போது 35 மாணவிகள் மட்டுமே இருக்கின்றனர். இதனிடையே, நேற்று முன்தினம் இரவில் சுமார் 9 மணியளவில், கழுகுமலை அம்பேத்கர் நகர் பகுதியில் வசித்து வரும் 16 மற்றும் 17 வயது இரண்டு சிறார்கள் போதையில் வந்துள்ளனர்.
அவர்கள் இருவரும் மாணவியரின் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த நிலையில், மாணவிகளிடம் ஆபாசமாக பேசி ரகளை செய்துள்ளனர். இதனால் அதிர்ந்துபோன மாணவிகள் சத்தமிட்டதும் இருவரும் தப்பிச் சென்றனர். இந்த விஷயம் குறித்து விடுதி பராமரிப்பாளர் மாடத்தி, கழுகுமலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர், 2 சிறார்களையும் கைது செய்து சிறுவர் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.