
கோவில்பட்டியில் தடையை மீறி கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ உள்பட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீசார் கைது செய்தனர்.
அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளான விவகாரத்தில் தமிழக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கடந்த 27ஆம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டு இருந்த நிலையில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் மறைவு காரணமாக அந்த ஆர்ப்பாட்டமானது ஒத்திவைக்கப்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட அந்த ஆர்ப்பாட்டம் இன்று (டிச.,30) நடைபெறும் என்று அதிமுக அறிவித்து இருந்தது.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தலைமையில் இன்று ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், ஆர்ப்பாட்டத்திற்கு கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் அனுமதி மறுத்தனர். ஆனாலும், கோவில்பட்டி பயணியர் விடுதி முன்பு தடையை மீறி அதிமுகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது, முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ தலைமையில் அதிமுகவினர் கருப்பு பலூன்களை பறக்கவிட்டு கோ பேக் முதல்வர் மு.க.ஸ்டாலின் - யார் அந்த சார் ? என்று கேள்வி எழுப்பி முழக்கமிட்டனர். இதையடுத்து தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் கடம்பூர் செ.ராஜூ எம்எல்ஏ உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்களை கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்தனர்.