• vilasalnews@gmail.com

ஒரு புறம் முதல்வர் நிகழ்ச்சி... இன்னொரு புறம் கண்டன ஆர்ப்பாட்டமா? பரபரக்கும் தூத்துக்குடி!

  • Share on

கடந்த 23ஆம் தேதி சென்னை அண்ணா பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்


தமிழகத்தின் தலைநகரின் மையத்தில் அமைந்துள்ள தமிழகத்தில் பெருமைமிகு அடையாளங்களில் ஒன்றான அண்ணா பல்கலைக்கழகத்திலேயே மாணவிக்கு இப்படியொரு கொடூரம் நிகழ்ந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி உள்ளது.


மாணவியின் புகாரின் பேரில் ஞானசேகரன் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர். இவர் திமுகவை சேர்ந்தவர் என பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சியினர் குற்றம் சாட்டி வருகின்றனர்.


பல்கலைக்கழக மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் சிறப்பு குழு அமைக்கப்பட்டு விசாரணை துவங்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட மாணவி கொடுத்த புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட எப்.ஐ ஆர் எப்படி லீக் ஆனது என்பது குறித்த விசாரணை தொடங்கியுள்ளது.


இந்த நிலையில், பெண்களுக்கு எதிரான பாலியல் வன்கொடுமைகள், பாலியல் சீண்டல்களைக் கட்டுப்படுத்தத் தவறிய திமுக அரசை கண்டித்து, கடந்த 27 ஆம் தேதி அதிமுக சார்பில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்போவதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்நிலையில், மன்மோகன் சிங் மறைவையொட்டி, இந்த ஆர்ப்பாட்டத்தை ஒத்திவைப்பதாக பின்னர் அதிமுக அறிவித்தது.


இந்த நிலையில், அதிமுக சார்பில் ஒத்திவைக்கப்பட்ட ஆர்ப்பாட்டமானது நாளை (டிச.,30) தமிழகம் முழுவதும் நடைபெறுகிறது. அதன்படி, தூத்துக்குடி வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் நாளை காலை கோவில்பட்டி பழைய பேருந்து நிலையம் எதிரில், முன்னாள் அமைச்சரும், வடக்கு மாவட்ட அதிமுக செயலாளருமான கடம்பூர் செ.ராஜூ தலைமையில் நடைபெற உள்ளது.


அதே வேளையில், புதுமைப்பெண் திட்டம் விரிவாக்கம், மினி டைடல் பூங்கா திறப்பு, கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வுக் கூட்டம் உள்ளிட்டவற்றுக்காக இரண்டு நாள் ( டிச., 29 மற்றும் 30 ) பயணமாக முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தூத்துக்குடிக்கு விமானத்தில் வந்திறங்கினார். அவருக்கு திமுக சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையடுத்து இன்று மாலையில் தூத்துக்குடியில் புதிதாக கட்டப்பட்ட மினி டைடல் பூங்காவை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.


தொடர்ந்து, கட்சி நிர்வாகிகளுடன் கள ஆய்வு கூட்டத்தில் கலந்து கொண்டு, நிகழ்ச்சியை முடித்து விட்டு, தூத்துக்குடி மறவன்மடத்தில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் தங்குகிறார். பின்னர், அடுத்த நாள் ( டிசம்பர் 30 ) திங்கள்கிழமை புதுமைப்பெண் விரிவாக்கத் திட்ட தொடக்க விழா காமராஜ் கல்லூரியில் நடைபெறுகிறது. அதில் முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு புதுமைப்பெண் விரிவாக்க திட்டத்தை தொடங்கி வைக்கிறார்.


இந்த நிலையில், தூத்துக்குடிக்கு வருகை தந்து புதிய கட்டிடங்களை திறந்து வைத்தும், புதிய திட்டங்களை தொடங்கி வைத்தும் நிகழ்வுகள் நடைபெற்று கொண்டிருக்கும் அதே வேளையில், தூத்துக்குடியில் இன்னொரு புறம் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசை கண்டித்து அதிமுக சார்பில் கோவில்பட்டில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ள சம்பவம் அரசியல் வட்டாரத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.

  • Share on

தூத்துக்குடியில் தமிழக முதல்வரால் திறக்கப்பட்ட மினி டைடல் பூங்காவின் சிறப்புகள் என்ன?

தூத்துக்குடியில் மாற்றுக் கட்சியினர் தமிழக வெற்றிக் கழகத்தில் ஐக்கியம்!

  • Share on