
எட்டயபுரம் அருகே இருசக்கர வாகனத்தில் 18 கிலோ புகையிலை பொருட்களை கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் பகுதியில் புகையிலை பொருட்கள் கடத்தப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் மாசார்பட்டி காலனி பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சந்தேகத்திற்கு இடமான முறையில் சாக்குப்பையுடன் 2 பேர் இருசக்கர வாகனத்தில் வந்தனர். அவர்களை தடுத்து நிறுத்தி போலீசார் விசாரணை நடத்தினர்.
அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பேசியதால் சந்தேகம் அடைந்த போலீசார், இருசக்கர வாகனத்தில் இருந்த சாக்குப்பையை சோதனை செய்தனர். அந்த பையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து, அந்த பையில் இருந்த 18 கிலோ புகையிலை பொருட்களையும், பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், இந்த கடத்தலில் ஈடுபட்டது என். வேடபட்டி கிராமத்தைச் சேர்ந்த ரத்தினசாமி மகன் கார்த்திக்குமார் (32), வவ்வால் தொத்தி கிராமத்தை சேர்ந்த பால்சாமி மகன் பொன்ராஜ் (34) என தெரிய வந்தது. இதுகுறித்து மாசார்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த 2 பேரையும் கைது செய்தனர்.