
திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் வந்த திருப்பூரைச் சேர்ந்த 3 பேர் தூத்துக்குடியில் நடந்த சாலை விபத்தில் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர்.
திருப்பூரில் இருந்து திருச்செந்தூர் நோக்கி வந்துகொண்டிருந்த ஆம்னி கார் ஒன்று மதுரை - தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலை மேலக்கரந்தையில் இன்று அதிகாலை சுமார் 1 மணி அளவில் வந்த போது, காரை ஓட்டி வந்த திருப்பூர் மாவட்டம் அய்யன் தோட்டத்தை சேர்ந்த ஆரிச்சாமி என்பவரது மகன் செல்வராஜுக்கு தூக்கம் வரவே, காரை ஓரமாக நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துள்ளார்.
அப்போது, பின்னால் வந்த அடையாளம் தெரியாத வாகனம் காரின் மீது வேகமாக மோதியதில் கார் சாலை விட்டு தூக்கி எறியப்பட்டு, காரில் வந்த 5 நபர்களில் ஆரிச்சாமி மகன் செல்வராஜ், பழனிச்சாமி மகன் விஜயகுமார், காளிமுத்து மகன் விக்னேஷ் ஆகியோர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும், காளிமுத்து மகன் மகேஷ் குமார், ரத்தினகுமார் மகன் ராஜ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர். மேலும், இந்த விபத்து குறித்து மாசார்பட்டி காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.