தூத்துக்குடி மாவட்டத்தில் பயிர் சாகுபடி அடங்கலுக்கு ஏழை விவசாயிகளிடம் அடாவடியாக பணம் வசூல் செய்ததாக கிராம நிர்வாக அலுவலர் மீது எழுந்த புகாரைத் தொடர்ந்து விஏஓ காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டம், ஸ்ரீவைகுண்டம் வட்டத்திற்குட்பட்ட செக்காரக்குடி -II கிராம நிர்வாக அலுவலராக செல்வக்கனி என்பவர் பணிபுரிந்து வந்தார். தற்போது பெய்த கனமழையில் புஞ்சை நிலங்களில் பயிரிடப்பட்ட பயிர் சாகுபடியானது முற்றிலும் அழிந்ததால் பயிர் காப்பீடு மற்றும் இழப்பீடு பெறும் வகைக்கு பயிர் அடங்கல் பெறுவதற்கு விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலரை போய் சந்தித்தபோது அடங்களுக்கு 500 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை வசூல் செய்துள்ளார்.
இது தொடர்பாக செக்காரக்குடி கிராம மக்கள் தூத்துக்குடி வருவாய் கோட்டாட்சியர் பிரபுவிடம் புகார் அளித்தனர். மேலும், செல்வக்கனி என்பவர் கிராம மக்களிடம் அடங்கல் வழங்க பணம் கேட்டது தொடர்பாக வீடியோவும் கொடுக்கப்பட்டது. இது தொடர்பாக ஸ்ரீவைகுண்ட வட்டாட்சியர் ரத்னா சங்கர் விசாரணை நடத்த கோட்டாட்சியர் உத்தரவிட்டார்.
இதன் அடிப்படையில் விசாரணை நடத்தி செக்காரக்குடி கிராம அலுவலர் பணியில் இருந்து உடனடியாக அவரை விடுவித்து அந்த இடத்தில் பொறுப்பு விஏஓ வாக சுரேஷ் என்பவரை நியமித்து நேற்று முன்தினம் வருவாய் கோட்டாட்சியர் பிரபு உத்தரவிட்டார். தற்போது கிராம நிர்வாக அலுவலர் செல்வக்கனி எந்தப் பணியும் வழங்காமல் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.