தூத்துக்குடி அனல்மின் நிலையத்தில் ஒரு வாரமாக 3 யூனிட்களில் 630 மெகாவாட் மின்சார உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கொதிகலனை குளிர்விப்பதற்காக கடல் நீர் உள்ளே செல்ல கால்வாய் உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பரில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது, கால்வாய் முழுவதும் சாம்பல் புகுந்ததால், ஒரு மாதம் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டிருந்தது. இதையடுத்து 6 மாதங்களுக்கு முன்பு, சாம்பல் உட்புகாமல் இருக்க புதிய கால்வாய் 6 அடி உயரத்திற்கு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், தமிழகத்தில் வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக அண்மையில் தென் மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இரண்டு நாட்களுக்கு தொடர்ச்சியாக கனமழை பெய்தது. அதில், கடந்த 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் பெய்த பலத்த மழையால், கடல் நீரை உள்ளே கொண்டு செல்லும் கால்வாயில் சுவர் இடிந்து விழுந்தது. இதனால், சாம்பல் உட்புகுந்து கடல்நீர் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால், கடந்த 15 ஆம் தேதியில் இருந்து ஒருவாரமாக அனல்மின் நிலையத்தின் முதல் மூன்று யூனிட்களிலும், 630 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், பல கோடி ரூபாய் வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ள நிலையில், சாம்பல் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. புதிதாக கட்டப்பட்ட சுவர் இடிந்து விழுந்தது குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், 3 யூனிட்களில் மீண்டும் மின்உற்பத்தி தொடங்க இன்னும் ஒரு வார காலம் ஆகும் என்றும் சொல்லப்படுகிறது.