கடந்த 2023 டிசம்பரில் தாமிரபரணி ஆட்சியில் மிகப்பெரிய அளவில் மழைவெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இந்த மழை வெள்ளத்தால் ஸ்ரீவைகுண்டம் அணையின் வடபகுதியில் உள்ள மணல்வாரி மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேறி செல்லும் தரைத்தளம் சேதமானது. சேதமான பகுதிகளை முழுமையாக சீரமைத்திட வேண்டும் என்று விவசாயிகள் மற்றும் பாஜகவினர் தமிழக அரசிடம் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர்.
இதனைத் தொடர்ந்து, மழை வெள்ளத்தால் சேதம் அடைந்த ஸ்ரீவைகுண்டம் அணைப்பகுதியில் சீரமைக்க கடந்த 10.2.2024ல் தமிழக அரசு ரூபாய் 60 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால் இந்த நிதி ஒதுக்கப்பட்டு பல மாதங்கள் கடந்தும், நவம்பர் மாதம் இறுதியில் தான் அணையில் மழை வெள்ள சீரமைப்பு பணிகள் துவங்கப்பட்ன. இந்த நிலையில் தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்திரங்கள் தலைமையில் பாஜகவினர், ஸ்ரீவைகுண்டம் அணையில் மழை வெள்ள சீரமைப்பு பணிகள் அரசாணையில் குறிப்பிட்டுள்ளபடி முறையாக நடைபெறவில்லை என்று குற்றம் சாட்டி போராட்டம் நடத்தப் போவதாகவும் அறிவித்திருந்தனர்.
இது தொடர்பாக ஸ்ரீவைகுண்டம் நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற சமாதான கூட்டத்திற்கு பாஜகவினர் மாவட்ட தலைவர் சித்ராங்கதன் தலைமையில் வந்தனர். ஆனால் அங்கு நீர்வளத்துறை அதிகாரிகள் தங்களின் கோரிக்கைகளுக்கு சம்பந்தப்பட்டவர்கள் விளக்கம் அளிக்காமல் வேறு நபர்கள் மூலம் விளக்கம் அளிக்க முயன்றதாக கூறி பாஜகவினர் கூட்டத்தை புறக்கணித்து வெளியே சென்றனர்.
பின்னர், இது குறித்து தெற்கு மாவட்ட பாஜக தலைவர் கூறுகையில், "அணையை சீரமைப்பதற்காக தமிழக அரசு ரூபாய் 60 லட்சம் நிதி ஒதுக்கியது. ஆனால், நீர்வளத்துறையினரோ அந்த 60 லட்சத்தில் ஆற்றின் கரையோரத்தில் தடுப்புச் சுவர் கட்டியது போக மீதி பணம் சுமார் 2 லட்சத்தில் அணையின் உட்பகுதியில் சீரமைப் பணிகளை செய்துள்ளோம் என்று சொல்வது அதிர்ச்சி அளிக்கிறது. அரசு ஒதுக்கிய நிதி 60 லட்சம் எங்கே போனது என்றால் அதற்கு பதில் தர மறுக்கும் அதிகாரிகள், புதிதாக திட்டம் தயாரித்து இனி அணையை சீரமைக்கப் போவதாக கூறுவது ஏற்புடையது அல்ல".
அரசு ஒதுக்கிக்க ரூபாய் 60 லட்சம் நிதி என்னாச்சு என்பதை அறிந்திட, சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் விரைவில் பொதுநல வழக்கு தொடர முடிவு செய்துள்ளோம் இவ்வாறு அவர் கூறினார்.
இந்தநிலையில், இந்த ரூ.60 லட்சம் குறித்து பாஜகவினர் வெளியிட்ட கார்ட்டூன் போஸ்ட்டர் ஒன்று பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஸ்ரீவைகுண்டம் அணை சீரமைப்பு பணி விவகாரத்தில் தொடர்ந்து போராடிவரும் பாஜகவினர், ஒதுக்கப்பட்ட நிதி 60 லட்சத்தை குதிரையாக சித்தரித்து, அந்த குதிரையானது பாம்புப் புற்றுக்குள் சென்று ஒளிந்து கொள்வது போன்றும், அந்த குதிரையின் வாலை நீர்வளத் துறையினர் பிடித்து இழுத்து இதுதான் குதிரை என்று காண்பிப்பது போன்ற கார்ட்டூன் போஸ்டர் ஸ்ரீவைகுண்டம் பகுதியில் பரப்ப ஏற்படுத்தியுள்ளது.