குறுக்குச்சாலை அருகே பைக் மீது கார் மோதிய விபத்தில் இரண்டு பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், ஆத்தூர் அருகே உள்ள தலைவன்வடலி கிராமம், நாடார் தெருவை சேர்ந்தவர்கள் சித்திரைவேல் ( 60 ) திரவியராஜ் ( 55 ) இருவரும் இருசக்கர வாகனத்தில் நேற்று எட்டயபுரம் சென்று விட்டு மாலை ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது, குறுக்குச்சாலை அருகே வந்தபோது பெட்ரோல் போடுவதற்காக பைக்கை திருப்பி உள்ளனர். அப்போது பின்னால் வேகமாக வந்த கார் எதிர்பாராத விதமாக பைக்கின் மீது பயங்கரமாக மோதியதில், பைக்கில் இருந்த இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஒட்டப்பிடாரம் காவல் ஆய்வாளர் ராஜ் மற்றும் போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உயிரிழந்த இருவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, கார் டிரைவர் குரும்பூரை அடுத்த துறையூரைச் சேர்ந்த பள்ளிவாசல் தெரு அலாவுதீன் மகன் சையது முகமது ( 37 ) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.