• vilasalnews@gmail.com

தூத்துக்குடி பிரபல ரவுடிக்கு ஆயுள் தண்டனை : மதுரை ஐகோர்ட் தீர்ப்பு!

  • Share on

கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று பரோலில் வந்து மற்றொரு கொலை செய்த வழக்கில் தூத்துக்குடி கைதிக்கு மதுரை ஐகோர்ட் கிளை ஆயுள் தண்டனை விதித்து உத்தரவிட்டது. இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


தூத்துக்குடி மகிழ்ச்சிபுரம் பகுதியை சேர்ந்தவர் சுடலைமுத்து என்ற காட்டேரி சுடலை முத்து (52). இவர் கடந்த 2010ல் நடந்த ஒரு கொலை வழக்கில் இவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. அதன் பின்னர் 2010ல் சுடலைமுத்து பரோலில் வந்தார். 


அப்போது, தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ஜோதி நகர் பகுதியில் தனது நண்பரான அண்ணாநகரை சேர்ந்த மனோகரன் (40) என்பவரை கொலை செய்தார். இதையடுத்து, சுடலைமுத்து கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடந்தது. விசாரணை முடிவில் மனோகரன் கொலை வழக்கில் சுடலை முத்து மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை எனக்கு கூறி அவரை 4.2.2019ல் தூத்துக்குடி மாவட்டம் முதன்மை நீதிமன்றம் விடுதலை செய்தது.


இதை எதிர்த்து அரசு தரப்பில் ஐகோர்ட் மதுரை கிளையில் அப்பீல் செய்யப்பட்டது. இந்த மனுவை மீண்டும் விசாரித்த நீதிபதிகள் சுவாமிநாதன், பூர்ணிமா ஆகியோர் சுடலை முத்து மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளதால் அவருக்கு நேற்று தண்டனை விவரத்தை அறிவித்தனர்.


இதற்காக சுடலைமுத்து மதுரை நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டிருந்தார். அப்போது நீதிபதிகள் இந்த கொலை வழக்கில் சுடலைமுத்து குற்றவாளி என்பதால் அவருக்கு ஆயுள் தண்டனை வழங்குவதாகவும், தூக்கு தண்டனை வழங்கக் கூடாது என உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளதால் இந்த தண்டனை வழங்கப்படுவதாகவும் கூறினார். இதையடுத்து சுடலைமுத்து மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.


பின்னர் அங்கிருந்து சுடலைமுத்து பலத்த பாதுகாப்புடன் அழைத்து வரப்பட்டு தூத்துக்குடி மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். அதன் பின்னர் சிப்காட் இன்ஸ்பெக்டர் சைரஸ் தலைமையிலான போலீசார் சுடலைமுத்துவை பாதுகாப்புடன் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்துள்ளனர்.


காட்டேரி என பெயர் வந்தது எப்படி?


தற்போது தண்டனை உறுதி செய்யப்பட்டுள்ள சீரியல் கில்லர் காட்டேரி சுடலைமுத்து கடந்த 8.3.2001 முதல் 21.3.2001 வரை தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து தூத்துக்குடியில் இரண்டு பால் வியாபாரிகள், ஆத்தூர் அருகே கீரனூரில் ஒரு பிச்சைக்காரர், அதன் பின் உடன்குடி அருகே ஒரு ஆட்டோ டிரைவர், பின்னர் மாப்பிள்ளையூரனியில் ஒரு மாற்றுத்திறனாளி என 13 நாட்களில் 5 பேரை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார். இந்த சம்பவங்கள் நடந்த நேரத்தில் கொலை செய்யப்பட்டவர்கள் ஒரே மாதிரியாக கழுத்து அறுத்து கொலை செய்யப்பட்டதால் அந்தக் காலகட்டத்தில் கொலையாளிகள் கழுத்தை அறுத்து ரத்தம் குடிப்பதாக வதந்திகள் பரவி இருந்தது. இதனால் அந்த கொலையாளிக்கு காட்டேரி என்ற பெயரும் ஏற்பட்டது. இதன் பின்னர் கைது செய்யப்பட்ட சுடலை முத்து பரோலில் வந்தபோது தான் தனது நண்பர் மனோகரனை கழுத்தறுத்து கொலை செய்துள்ளார்.

  • Share on

தூத்துக்குடியில் நாளை மறுநாள் தெற்கு மாவட்ட செயற்குழு கூட்டம்!

அயிரவன்பட்டி கிராமத்தில் நீர்த்தேக்கத் தொட்டி : சண்முகையா எம்எல்ஏ திறந்து வைத்தார்!

  • Share on