தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவில் செம்மண் பரப்பளவு கொண்ட தேரி பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும் அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
தூத்துக்குடி அருகே முள்ளக்காடு கோவளம் கடற்கரை பகுதியில் கடல் சாகச விளையாட்டு மையம் அமைப்பது தொடர்பாக விளையாட்டு மையம் அமையும் கடற்கரைப் பகுதியை தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர் ராஜேந்திரன், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன் ஆகியோர் டிசம்பர் 19ஆம் தேதி அன்று நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
பின்னர் அமைச்சர் ராஜேந்திரன் செய்தியாளர்களிடம் பேசும்போது "தமிழக முதல்வர் உத்தரவின்படி இந்த கோவளம் கடற்கரை பகுதியை சுற்றுலாத்தலமாக மாற்றும் வகையில் நீர் சாகச விளையாட்டு போட்டிகள் நடத்தும் மையம் அமைக்கப்படவுள்ளது என்றார். மேலும், தூத்துக்குடி மாவட்டத்தில் அதிகளவில் செம்மண் பரப்பளவு கொண்ட தேரி பகுதிகளை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டம் உள்ளதாகவும்" அவர் தெரிவித்தார்.
இந்த நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இந்த செம்மண் தேரி பகுதியின் சுவாரஸ்யம் உங்களுக்கு தெரியுமா? வாங்க பார்ப்போம்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் அருகே தேரிக்குடியிருப்பு முதல் நாசரேத் வரையிலும் சுமார் 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் செம்மண்வனமாக காட்சியளிக்கும் ஓர் அழகிய வளமான பகுதியாகும். இந்த தேரிக்காட்டில் மிகவும் பிரசித்தி பெற்ற மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவில், தேரிக்குடியிருப்பு கற்குவேல் அய்யனார் கோவில் உள்ளிட்ட பல்வேறு சக்திமிக்க கடவுள்கள் வீற்றிருக்கும் கோவில்கள் உள்ளது. இதனால் இவை அய்யனாரின் பூமி என்றும் அழைக்கப்படுகிறது.
அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலை சூழ்ந்து காணப்படும், இயற்கையிலே அமைந்த வற்றாத சுனை நீரானது தேரிக்காட்டு பகுதியை மிகவும் வளம் கொழிக்க வைக்கிறது. பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியான தேரிக்காடானது எங்கும் செந்நிறத்தில் மண்மேடுகள் சூழ்ந்தும், பனை, முந்திரி, கருவேலம் உள்ளிட்ட ஏராளமான மரங்களும், புதர் செடிகளும் நிறைந்ததாகவும் காணப்படும்.
ஆதிச்சநல்லூர் அகழ்வாராய்ச்சியுடன் தொடர்புடைய அதிசய பூமிகளில் ஒன்று இந்த தேரிக்காடு. தமிழகத்தின் வேறு எந்த பகுதியிலும் எங்குமே பார்க்க முடியாத ஓர் விசித்திரமான பூமி தேரிக்காடு. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எங்கு பார்த்தாலும் ஒரே செம்மணல் தான். கற்கள் எதுவும் இல்லாமல், ஏறக்குறைய மாவு போன்ற பதத்தில் மிக நைசாகக் காணப்படும் இந்த நிலத்தில் நடந்தால், கால்கள் அரை அடி அளவுக்காவது பூமியில் புதைந்துவிடும் வகையில் இந்த செம்மணல் மிக மெதுவானதாக மெத்தை போல இருக்கும்.
தமிழகத்தின் பெருமைவாய்ந்த தேரிக்காட்டை மையப்படுத்தியும், அதனை நம்பி வாழும் எளிய மக்களின் வாழ்வியல்களையும் எடுத்துக்கூறும் வகையிலும் ஏராளமான நூல்களும் எழுதப்பட்டுள்ளன.
தமிழ் சங்ககால இலக்கியங்களில் பாலை திணை பற்றி குறிப்பிடும் பாடல்களிலும் செம்மண்தேரி பற்றி எடுத்துரைக்கப்பட்டு உள்ளது.
'ஈரம் பட்ட செவ்விப் பைம்புனத்தோரே ருழவன் போலப்பெருவிதுப் புற்றன்றோ னோகோ யானே' என்ற குறுந்தொகை பாடலில், செம்மண் ஈரம் காயுமுன்னர் உழுது முடிக்க துடிப்பது போல தலைவியை காண விழையும் தலைவனின் உள்ளமும் துடிப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் மழைக்காலத்தில் செம்மண்தேரியில் சிவப்பு நிறத்தில் ஓடும் காட்டாறுகளை 'செம்புலப் பெயனீர் போல' என்றும் பல இடங்களில் குறிப்பிடப்பட்டு உள்ளது.
தூத்துக்குடியை உள்ளடக்கிய ஒருங்கிணைந்த நெல்லை மாவட்டத்தில் அமையப்பெற்ற தேரிக்காடானது ஐந்து வகை நிலங்களையும் உள்ளடக்கிய தனிச்சிறப்பையும் பெற்றுள்ளது. அதாவது மலை, காடு, வயல், கடற்கரை, பாலைவனம் ஆகிய 5 வகையான நிலங்களும் தேரிக்காட்டில் பரவி கிடக்கின்றது. தேரிக்காட்டில் செம்மண் 3 அடுக்குகளாக உள்ளது. இதில் மேலடுக்கு 2 ஆயிரம் ஆண்டுகளும், நடு அடுக்கு 5 ஆயிரம் ஆண்டுகளும், கீழடுக்கு 10 ஆயிரம் ஆண்டுகளும் பழமையானது.
இயற்கை எழில் கொஞ்சும் செம்மண் வனமான தேரிக்காட்டில் எண்ணற்ற திரைப்படங்களும் படமாக்கப்பட்டுள்ளது. கடந்த 1991 ஆம் ஆண்டு நடிகர் பிரபு நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்ற 'கிழக்கு கரை' திரைப்படத்தின் பெரும்பகுதி மேலப்புதுக்குடி அருஞ்சுனை காத்த அய்யனார் கோவிலைச் சுற்றியே படமாக்கப்பட்டது. அங்குள்ள வற்றாத சுனைநீரும் பல்வேறு காட்சிகளில் இடம் பெற்றது.
இசையமைப்பாளர் தேவாவின் இசையில் வாலியின் பாடல் வரிகளில் அனைத்து பாடல்களும் மக்களின் மனதை கவர்ந்தது. இதில் 'சிலுசிலுவென காற்று' என்ற பாடல் செம்மண் தேரி, சுனைநீரின் அழகினை முழுமையாக படம் பிடித்துக் காட்டி ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டது.
தேரிக்கரையான நாசரேத் கச்சனாவிளையைச் சேர்ந்த பிரபல இயக்குனர் ஹரி தனது படங்களில் முக்கிய காட்சிகளை தேரிக்காட்டில் தான் படமாக்கி வெற்றி கண்டார். அதில் 2005ஆம் ஆண்டு வெளியான ஐயா திரைப்படத்தில் 'ஒரு வார்த்தை சொல்ல ஒரு வருஷம் காத்திருந்தேன்' என்ற பாடலும், 2007 ஆம் ஆண்டு வெளியான தாமிரபரணி திரைப்படத்தில் இறுதிக்காட்சியில் இடம்பெற்ற சண்டைக்காட்சியும், 2010ஆம் ஆண்டு வெளியான சிங்கம் படத்தின் ஆரம்ப சண்டைக்காட்சியும் தேரிக்காட்டில் படமாக்கப்பட்டு ரசிகர்களின் மனதில் நீங்காத இடத்தை பிடித்தது.
சாகித்ய அகாடமி விருது பெற்ற பூமணியின் வெக்கை நாவலை தழுவி, இயக்குனர் வெற்றிமாறனின் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் 2019 ஆம் ஆண்டு வெளியான அசுரன் திரைப்படத்தின் இடைவேளை சண்டைக்காட்சியை புழுதி பறக்கும் செம்மண் தேரியில் தான் படமாக்கினர். இந்த படத்தில் நடித்த நடிகர் தனுசுக்கு தேசிய விருது கிடைத்தது.
இவ்வாறு, தமிழகத்திற்கே பெருமை சேர்க்கக்கூடிய நிலப்பரப்பாக உள்ள இந்த செம்பூமியான தேரிக்காட்டை சுற்றுலாத் தலமாக மாற்றும் திட்டம் உள்ளதாக தமிழக சுற்றாலாத்துறை அமைச்சர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடதக்கது.