ஆத்தூர் - முக்காணி பாலத்திற்கு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்த தடையை மீறி ஓடிய பாஜகவினரை விரட்டி பிடித்து போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சாலையில் ஏரல் அருகே முக்காணி தாமிரபரணி ஆற்றின் மீது கட்டப்பட்டிருந்த உயர்மட்ட பாலம் கடந்த ஆண்டு ஏற்பட்ட மழை வெள்ளத்தினால் பழுதடைந்து. இதனால், வாகன ஓட்டிகள் பயன்படுத்த முடியாத லாயக்கற்ற நிலை பாலத்திற்கு ஏற்பட்டது.
இந்தநிலையில், இந்த பாலம் பழுதடைந்து ஒரு ஆண்டு நிறைவடைந்த நிலையில் சீரமைக்க நடவடிக்கை எடுக்காத ஆளும் திமுக அரசை கண்டிக்கும் வகையில் முக்காணி ஆற்றுபாலத்திற்கு மலர் வளையம் வைத்து முதலாம் ஆண்டு நினைவஞ்சலி செலுத்தப்படும் என பாஜக சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன் அடிப்படையில், தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக தலைவர் சித்ராங்கதன் தலைமையில் அக்கட்சியினர் பாலத்திற்கு மலர் வளையம் வைக்க முயன்றனர். இதனையடுத்து போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசார் - மற்றும் பாஜகவினர் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்ய்து அங்குள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பாஜகவினரின் தடையை மீறிய இந்த போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
மேலும், போலீஸ் தடுப்புகளையும் மீறி திடீரென பாஜகவினர் சிலர் மலர் வளையம் வைக்க மலர் வளையத்தோடு பாலத்தை நோக்கி ஓட்டம் பிடித்தனர். இருந்த போதிலும் போலீசார் அவர்களை விடாது துரத்தி பிடித்து தடுத்தனர். இதனால் மேலும் அங்கு பரபரப்பானது.