தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு உணவு பொருட்கள், ரெடிமேட் ஆடைகள், எலக்ட்ரானிக் பொருட்கள், அவுரி இலை கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
பல்வேறு நாடுகளில் இருந்து நிலக்கரி, பருப்பு வகைகள், பழங்கள், ரசாயன பொருட்கள், காற்றாலை இறகுகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. ஆண்டுதோறும் துறைமுகத்தில் ஏற்றுமதி, இறக்குமதி சரக்குகளின் அளவு அதிகரித்து வருகிறது.
இந்நிலையில், துறைமுக மூன்றாவது முனையத்தில் நடக்கும் 40 சதவீத பணிகளில் பெண்கள் பணியாற்றி வருவதாக துறைமுக ஆணையம் பெருமையுடன் தகவல் வெளியிட்டு உள்ளது.
துறைமுக சமூக வலை தள பக்கத்தில் வெளியிடப்பட்ட தகவல்:
தூத்துக்குடி துறைமுக மூன்றாவது முனையமான சர்வதேச கொள்கலன் முனையமான டி.ஐ.சி. டி.. பாலின சேர்க்கையில் புதிய அளவுகோலை அமைக்கிறது. 40 சதவீத பெண் பணியாளர்களுடன், திட்டமிடல், கேட், ராட்சத கிரேன், ஆர்.டி.ஜி., கிரேன் செயல்பாடுகள், மனிதவளம், தகவல் தொழில்நுட்பம், நிதி மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கியமான பணிகளில் சிறப்பாக ஈடுபட்டு வருகின்றனர்.
பெண்கள் பங்கேற்பை ஊக்குவிப்பதால் சமத்துவத்தை வளர்ப்பதிலும், சமூக மாற்றத்தை ஏற்படுத்துவதிலும், இந்தியாவின் கடல்சார் தொழிலை வழிநடத்த பெண்களுக்கு அதிகாரம் அளிப்பதிலும் துறைமுக சர்வதேச கொள்கலன் முனையம் எடுத்துக் காட்டாக விளங்குகிறது. இவ்வாறு கூறப்பட்டுள்ளது.