துாத்துக்குடி மாவட்டத்தில், தொழிற்சாலைகளுக்கு கடல்நீர் சுத்திகரிக்கப்பட்டு, குடிநீராக வினியோகம் செய்யப்பட உள்ளது. இதற்காக, 904 கோடி ரூபாய் செலவில் கடல் நீரை சுத்திகரிக்கும் ஆலை அமைக்க, 'சிப்காட்' கோரிய டெண்டரில், நான்கு நிறுவனங்கள் இடையே கடும் போட்டி ஏற்பட்டுள்ளது.
துாத்துக்குடி சிப்காட் தொழில் பூங்காக்களில் உள்ள ஆலைகளுக்கான தண்ணீர், தாமிரபரணி ஆற்றில் இருந்து, குடிநீர் வாரியம் மூலமாக தினமும் சராசரியாக, 30 லட்சம் லிட்டர் பெறப்படுகிறது. தூத்துக்குடியின் குடிநீர் தேவைக்கு முக்கிய நீர் ஆதாரமாக, தாமிரபரணி ஆறு இருந்து வருகிறது. குடிநீர் தேவையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. எனவே, தூத்துக்குடியில் உள்ள ஆலைகளுக்கு தண்ணீர் வினியோகிக்க, முள்ளக்காடு கிராமத்தில் கடல் நீரை குடிநீராக மாற்றும் ஆலை அமைக்க சிப்காட் முடிவு செய்துள்ளது. இந்த ஆலை தினமும் 6 கோடி லிட்டர் கடல் நீரை, குடிநீராக மாற்றும் திறன் உடையதாக இருக்கும்.
மொத்தம் 904 கோடி ரூபாய் செலவில் அமையும் இந்த ஆலை, அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் அமைக்கப்பட உள்ளது. அதற்கான ஒப்பந்த நிறுவனத்தை தேர்வு செய்ய இந்த ஆண்டின் துவக்கத்தில் சிப்காட், 'டெண்டர்' கோரியது. அதில் நிறுவனங்கள் பங்கேற்க அவகாசம் நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில், சமீபத்தில் முடிவடைந்தது.
தற்போது, டெண்டரில் நான்கு நிறுவனங்கள் பங்கேற்றுள்ளது. இதில் தேர்வாகும் நிறுவனங்களின் விலைப் புள்ளி திறக்கப்பட்டு, தகுதியான நிறுவனத்தை தேர்வு செய்து, ஆலை அமைக்கும் பணிக்கான ஆணை வழங்கப்படும்.
கடந்த 2013ஆம் ஆண்டு சட்டசபையில் 110 விதியின் கீழ் அப்போதைய தமிழக முதல்வர் ஜெயலிதா தூத்துக்குடி மாவட்டங்களில் நிலவும் நிலத்தடி நீரின் நிலையற்ற தன்மை மற்றும் குடிநீர் தர பிரச்சனை ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அனைத்து காலங்களிலும் நிரந்தரமாக மக்களுக்கு குடிநீர் கிடைக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்டத்தில் 100 மில்லியன் லிட்டர் குடிநீர் திறனுடைய கடல் நீரைக் குடிநீராக்கும் நிலையங்கள் அமைக்கப்படும் என்று அறிவித்தார்.
தூத்துக்குடியில் கனரக தொழிற்சாலைகள் புதிதாக அமைவதற்கும், பன்னாட்டு நிறுவனங்கள் தூத்துக்குடியில் முதலீடு செய்யவும் தூத்துக்குடியில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, துடிசியா அமைப்பு சாா்பில் கடந்த 2019ல் தூத்துக்குடி வந்த முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியிடம் மனு அளிக்கப்பட்டது.
தூத்துக்குடி மாநகர மக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் கடல் நீரை குடிநீராக்கும் திட்டத்தை செயல்படுத்த வேண்டும். மழையை மட்டும் நம்பி இருக்கும் தூத்துக்குடி மக்களின் குடிநீர் பிரச்சினையை இனி வரும் காலங்களில் வறட்சி நேரத்திலும் தீர்க்கும் வேண்டும் என்றால் கடல்நீரை குடிநீராக்கும் திட்டமே ஒரே தீர்வாக அமையும். ஆகையால் மாவட்ட ஆட்சியர் போர்க்கால அடிப்படையில் இந்த திட்டத்துக்கு முக்கியத்துவம் கொடுத்து குடிநீர் பிரச்சினையை தீர்க்க வேண்டும், என அப்போதைய ( 2017 ) மாவட்ட ஆட்சியர் ரவிக்குமாரிடம் தூத்துக்குடி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.பெரியசாமி கோரிக்கை மனு கொடுத்தார் என்பதும் குறிப்பிடதக்கது!