• vilasalnews@gmail.com

திடீர் பள்ளம்...பொதுமக்களுக்கு தூத்துக்குடி மாவட்ட காவல்துறை கொடுத்த அட்வைஸ்!

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 12,13,14ஆம் தேதிகளில் கனமழை பெய்தது. இதனால் தாமிரபரணி ஆறு மற்றும் காட்டாறு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு பல கிராமங்கள் பாதிக்கப்பட்டன.


தூத்துக்குடி அய்யனடைப்பில் உள்ள செங்குளம் நிரம்பி உபரி நீர் சோரீஸ்புரம், அய்யனடைப்பு, மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் மற்றும் தூத்துக்குடி மாநகரப் பகுதிக்குள் வெள்ளநீர் புகுந்தது. இதனால் தூத்துக்குடி மாநகரின் மேற்கு பகுதிகளான 16, 17, 18 மற்றும் 34 வது வார்டுகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. குறிப்பாக இந்த பகுதியில் உள்ள தபால் தந்தி காலனி, ஆசீர்வாத நகர், செல்வ காமாட்சி நகர், ராஜீவ் நகர், பால்பாண்டி நகர், கதிர்வேல் நகர், முருகேசன் நகர், ராஜபாண்டி நகர், ஆசிரியர் காலனி, கோக்கூர், மில்லர்புரம் ஹவுசிங் போர்டு உள்ளிட்ட பகுதிகளில் குடியிருப்புகளை மழைநீர் சூழ்ந்ததால் மக்கள் பாதிக்கப்பட்டனர். 


இந்த பகுதிகளில் மழை நீரை வெளியேற்றும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடைபெற்று வருகிறது. 100க்கும் மேற்பட்ட ராட்சத மோட்டார் பம்புகள் மூலம் மழை நீர் தொடர்ந்து வெளியேற்றப்பட்டு வருகிறது. மழை நீர் வெளியேற்றும் பணிகளை சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மேயர் ஜெகன் பெரியசாமி ஆகியோர் தொடர்ந்து நேரில் சென்று பார்வையிட்டு மழை நீரை வெளியேற்றும் பணிகளை துரிதப்படுத்தி வருகின்றனர். இதில் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், மாநகராட்சி ஆணையர் மதுபாலன் மற்றும் அரசு அலுவலர்கள் பங்கேற்றனர்.


மேலும், இந்த மழையின் காரணமாக தூத்துக்குடி மாநகரில் உள்ள சாலைகளில் ஆங்காங்கே பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒருசில இடங்களில் உள்ள பள்ளங்களில் பேரிகார்டு தடுப்புகள் வைக்கப்பட்டு வாகன ஓட்டிகளுக்கு பள்ளங்கள் அடையாளங்கள் காட்டப்பட்டாலும், மழைநீர் தேங்கிய சாலையில் உள்ள பள்ளங்கள் தெரிவதில்லை. இதனை கவனிக்க தவறும் இருசக்கர வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்கும் சூழலும் உருவாகி வருகிறது. 


தூத்துக்குடி அரசு மருத்துவமனை செவிலிர் சுகப்பிரியா வழக்கம் போல் கடந்த 15ஆம் தேதி பணிக்கு செல்வதற்காக வீட்டில் இருந்து கிளம்பியவர் பிற்பகல் சுமார் 1 அளவில் ஆசிரியர் காலனி மெயின் ரோடு அருகே பாளையங்கோட்டை சாலையில் வந்துகொண்டிருந்த போது, மழைநீர் தேங்கிய சாலை பள்ளத்தில் எதிர்பாரதவிதமாக கீழே விழுந்துள்ளார். அப்போது, பாலமுருகன் என்பவர் பின்னால் வந்து கொண்டிருந்த நிலையில், அவரும் விழுந்து சுகப்பிரியா மீது மோதி விபத்திற்குள்ளானார். இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சுகப்பிரியா சுயநினைவின்றி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டதில், சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்தார். பாலமுருகன் லேசான காயங்களுடன் மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார் என்பது குறிப்பிட தக்கது.


தூத்துக்குடியில் பாளையங்கோட்டை சாலையில் இருந்து திருச்செந்தூருக்கு செல்ல திரும்பும் தென்பாகம் காவல் நிலையம் அருகே பெரியார் சிலை முன்பு உள்ள சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தால் பேருந்து உள்ளிட்ட பெரிய வாகனங்கள் திரும்ப முடியாமல் சிரமத்தை சந்திக்கின்றன. 


இந்நிலையில், கனமழை காரணமாக சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தில் மழைநீர் நிரம்புவதால் சாலையில் உள்ள பள்ளங்கள் கண்ணுக்கு புலப்படுவதில்லை. வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் மிக கவனமாக செல்லவும் என தூத்துக்குடி மாவட்ட காவல்துறை சார்பிலும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.


ஆகவே, மழை நீரை அப்புறப்படுத்தி வரும் அதே வேளையில் தூத்துக்குடி மாநகரில் உள்ள பிரதான மற்றும் அனைத்து சாலைகளிலும் ஏற்பட்ட திடீர் பள்ளங்களை உடனடியாக அடையாளம் கண்டு உடனடியாக போர்கால அடிப்படையில் சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகளும், பொதுமக்களும் கோரிக்கை வைத்துள்ளனர்.

  • Share on

குண்டும், குழியுமான தூத்துக்குடி கிழக்கு கடற்கரை சாலைக்கு விடிவு எப்போது? மாவட்ட ஆட்சியர் கொடுத்த அப்டேட்!

தூத்துக்குடி மாநகராட்சி சார்பில் பொதுமக்கள் குறை தீர்க்கும் முகாம் : ஆணையர் தகவல்!

  • Share on