தூத்துக்குடியில் சொத்து பிரச்சனையில், மூதாட்டியை தலையணையால் அழுத்தி கொலை செய்த வழக்கில் அவது உறவினரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி 1-ஆம் கேட் முகமதுசாதலிபுரத்தை சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவரது மனைவி செல்லம்மாள் (82). இவர் நேற்று முன்தினம் மாலை தனது வீட்டில் இறந்து கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்த வடபாகம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து போலீசார் நடத்திய விசாரணையில், செல்லம்மாள் முகத்தை தலையணையால் அழுத்தி கொலை செய்யப்பட்டு இருப்பது தெரியவந்தது.
இது குறித்து வடபாகம் போலீசார் வழக்கு பதிவு செய்து செல்லம்மாளின் உறவினர் பொன்ராஜ் (42) என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் செல்லம்மாளை கொலை செய்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.
தொடர்ந்து நடத்திய விசாரணையில் பொன்ராஜ், தங்களுக்கு சொந்தமான இடத்தில் ஒரு பகுதியை செல்லம்மாள் குடும்பத்தினர் ஆக்கிரமித்து வீடு கட்டி இருப்பதாகவும், அதனை தட்டி கேட்டதால் தகராறு ஏற்பட்டதாகவும், இதன் காரணமாக தனியாக இருந்த செல்லம்மாளை தலையணையால் அழுத்தி கொலை செய்ததாகவும் தெரிவித்துள்ளார். இதனைத்தொடர்ந்து வடபாகம் போலீசார் பொன்ராஜை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.