தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தமிழகத்தின் பல மாவட்டங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. மன்னார் வளைகுடா மற்றும் அதனை ஒட்டியுள்ள பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதியானது இன்று லட்சத்தீவு - மாலத்தீவு பகுதிகளில் நிலவி வருகிறது.
இதனால், கனமழையின் எதிரொலியாக இன்று தமிழ்நாட்டில் திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, திருச்சி, விழுப்புரம், தேனி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் அனைத்து கல்லூரிகளுக்கும் இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், நாளை தெற்கு அந்தமான் கடல் பகுதியின் மேல் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ள நிலையில் அடுத்த 48 மணிநேரத்தில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாகக்கூடும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
இழை மேற்கு - வடமேற்கு திசையில் தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும். இதன் காரணமாக தென் தமிழகத்தில் பெரும்பாலான இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான வரை மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்தநிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் டிசம்பர் 12, 13 ,14 ஆகிய மூன்று நாட்கள் பள்ளிகள் மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டிருந்தார். ஆனால், கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் 14,15,16,17 ஆகிய நான்கு நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு என்று தனியார் தொலைக்காட்சி நிறுவனத்தின் பெயர் நியூஸ் கார்டு ஒன்று சமூகவலைதளங்களில் பரவி வருகிறது. ஆனால், இவ்வாறு பரவும் செய்தி தவறாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. செய்தி நிறுவனத்தின் பெயரில் யாரோ சில விஷமிகள் தவறாக சித்தரித்து வெளியிட்டுள்ளதாக தெரிகிறது. ஆகவே, விடுமுறை குறித்த எவ்வித அறிவிப்பும் அதிகாரபூர்வமாக வெளியாகாததால் பொதுமக்கள் யாரும் விடுமுறை என்று வரும் தவறான தகவலை நம்பவேண்டாம்.