மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலுக்கு 14.12.2024 மற்றும் 15.12.2024 ஆகிய இரண்டு நாட்களும் வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் தொடர்ந்து கன மழை பெய்து வருவதாலும், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டத்தில் பெய்து வரும் கனமழை காரணமாகவும் தாமிரபரணி ஆற்றில் மிக அதிகமாக வெள்ள நீர் வந்து கொண்டிருக்கிறது.
இன்று (14.12.2024) காலை 9 மணி நிலவரப்படி, தூத்துக்குடி மருதூர் அணைக்கட்டிலிருந்து சுமார் 61,314 கன அடியும், திருவைகுண்டம் அணைக்கட்டில் இருந்து சுமார் 54,474 கன அடியும், கோரம்பள்ளத்தில் இருந்து உப்பாற்று ஓடையில் சுமார் 11,900 கன அடி வெள்ள நீரும் வெளியேற்றப்பட்டு வருகிறது.
கன மழையின் காரணமாக மாவட்டத்தின் பல இடங்களில் சாலைகளில் வெள்ள நீர் செல்வதால் மாற்று பாதையில் வாகனங்கள் இயக்கப்பட்டு வருகிறது. தூத்துக்குடியில் இருந்து திருச்செந்தூர் செல்லும் சாலையும், திருநெல்வேலியில் இருந்து ஸ்ரீவைகுண்டம் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும், ஏரல் வழியாக திருச்செந்தூர் செல்லும் சாலையும் மழை வெள்ளத்தால் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இந்த போக்குவரத்து சீர் செய்ய போர்க்கால அடிப்படையில் நடவடிக்கைகள் தொடர்ந்து எடுக்கப்பட்டு வருகிறது.
எனவே, மழை மற்றும் வெள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு திருச்செந்தூர் செந்திலாண்டவர் கோவிலுக்கு 14.12.2024 மற்றும் 15.12.2024 ஆகிய இரண்டு நாட்களும் வெளியூரிலிருந்து பொதுமக்கள் வருகை தருவதை தவிர்க்குமாறு மாவட்ட நிர்வாகத்தின் சார்பாக மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்கள்.