விளாத்திகுளம் அருகே உள்ள கிராமத்தில் வெள்ளநீர் ஊருக்குள் புகுந்ததால் அக்கிராம மக்கள் கடும் அவதியடைந்துள்ளனர்.
வங்கக் கடலில் உருவாகியுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இடி, மின்னலுடன் மழை பெய்யும் என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அந்த வகையில், தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் நேற்று முதல் கன மழை பெய்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில், கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் பகுதிகளில் அதிகளவு மழை பெய்துள்ளது. கோவில்பட்டி பகுதியில் 36 செ.மீ மழை பெய்துள்ளது. அந்த பகுதியில் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்ததால் பாதிக்கப்பட்ட 397 பேர் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
தாமிரபரணி ஆற்றுப்பகுதியில் அதிக அளவில் வெள்ளப்பெருக்கு ஏற்படும் அபாயம் உள்ளதால் ஸ்ரீவைகுண்டம், ஏரல் தாலுக்காக்களில் உள்ள ஆற்றங்கரையோர மக்கள் உடனடியாக நிவாரண முகாம்களுக்கு செல்ல வேண்டும் என மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து நீர்நிலைகளிலும் வெள்ள நீர்வரத்து மிகவும் உன்னிப்பாக அனைத்து நிலை அலுவலர்களாலும் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது எனவும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், விளாத்திகுளத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக, அங்குள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மானாவாரி நிலத்தில் பயிரிடப்பட்ட பயிர்கள் அனைத்தும் நீரில் மூழ்கி சேதமடையும் சூழல் ஏற்பட்டுள்ளது. அதே போல, குளத்தூர் அருகே உள்ள விருசம்பட்டி, முள்ளூர் ஆகிய கிராமங்களில் காட்டாறு வெள்ளம், கண்மாய் உடைப்பால் கிராமத்திற்குள் வெள்ளநீர் புகுந்ததால் கிராம பொதுமக்கள் பெரும் அவதியடைந்துள்ளனர். வெள்ளநீரை உடனடியாக அப்புறப்படுத்த அரசு துறை சார்ந்த அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.