வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ளது. இது மெதுவாக தமிழக கடலோரப் பகுதிகளை நோக்கி நகர்ந்து வருகிறது. இதையடுத்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக நல்ல மழை பெய்து வருகிறது. குறிப்பாக நாளைய தினம் தென் மாவட்டங்களில் அதி கனமழையும், வட மாவட்டங்களில் கனமழையும் பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென் தமிழகத்தில் இன்று காலை முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நெல்லை, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய 3 மாவட்டங்களுக்கு அதிகனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. மேலும், கனமழை காரணமாக தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் நாளை 13.12.2024 அன்று பல்கலைக்கழக தேர்வு எழுதும் மாணவர்கள் தவிர பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.