• vilasalnews@gmail.com

தூத்துக்குடியை மிரட்டும் மழை.... ஆறு, குளங்களின் நீர் நிலவரம் எப்படி இருக்கு?

  • Share on

வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது அடுத்த 12 மணி நேரத்தில் தென்தமிழகத்தின் கடலோரப் பகுதியை நோக்கி நகர்ந்து வலுவிழக்க வாய்ப்பு உள்ளது. இதனால், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் கன முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


இந்நிலையில் தான், தமிழகத்தின் 3 தென்மாவட்டங்களுக்கு இன்று ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தேனி, மதுரை, சிவகங்கை, விருதுநகர், ராமநாதபுரம், கன்னியாகுமரி, திருவாரூர், நாகை, தஞ்சாவூர், புதுக்கோட்டை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட்டும் விடுக்கப்பட்டுள்ளது.


ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, அரியலூர், பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 10 மாவட்டங்களில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.


தூத்துக்குடி மாவட்ட மழை வெள்ள பாதுகாப்பு நடவடிக்கை 


தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரையில், தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றின் கரையோர பகுதிக்கு செல்லாமல் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்படுகிறது.


தாமிரபரணி ஆறு, கோரம்பள்ளம் குளம், உப்பாறு ஓடை உள்ளிட்ட அனைத்து நீர் நிலைகளிலும் பொதுமக்களும், கால்நடைகளும் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர், ஊராட்சி செயலாளர் மூலம் கண்காணித்திட அனைத்து வட்டாட்சியர்கள், வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வரப்படுகிறது.


தூத்துக்குடி மாவட்டம் முழுதும் உள்ள 639 குளங்களில் உள்ள நீரின் இருப்பு நிலவரம், வரக்கூடிய நீர் அளவு முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதில், 32 குளங்கள் 70 சதவீதத்திற்கும் மேல் நீர் நிரம்பி உள்ளது. ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள ஒட்டநத்தம் குளம், முரம்பன்குளம் 100 சதவீதம் நீர் நிரம்பியுள்ளது. இதனால், அதிலிருந்து வெளிப்படும் நீர்வரத்து முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் தெரிவித்துள்ளார்.

 

  • Share on

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்... கலெக்டர் கொடுத்த உடனடி அறிவிப்பு!

தூத்துக்குடி மாநகராட்சியின் கட்டுப்பாட்டு அறையில் மேயர் ஜெகன் பெரியசாமி; ஆணையர் மதுபாலன்!

  • Share on