• vilasalnews@gmail.com

தூத்துக்குடி மாவட்டத்திற்கு ரெட் அலர்ட்... கலெக்டர் கொடுத்த உடனடி அறிவிப்பு!

  • Share on

மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் இளம்பகவத் பொதுமக்களுக்கு தகவல் கொடுத்துள்ளார்.


தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில் இன்று (12.12.2024), மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் செய்தியாளர்களிடம் தெரிவித்ததாவது:- 


தூத்துக்குடி மாவட்டத்திற்கு இந்திய வானிலை ஆய்வு மையத்தால் இன்று 12.12.2024 அன்று மிக கனமழை (ரெட் கலர்) எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதனால் காலையில் இருந்து மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நேரத்தில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நமது மக்களுக்கு அறிவிக்க விரும்புகிறேன். 


நமது மாவட்டத்தில் இருக்கக்கூடிய மருதூர் மற்றும் திருவைகுண்டம் அணைக்கட்டு பகுதிகள், கலியாவூர் முதல் புன்னக்காயல் வரை இருக்கக்கூடிய தாமிரபரணி ஆற்றங்கரையோர கிராமங்களில் வசிக்கும் பொதுமக்கள் தாமிரபரணி ஆற்றில் குளிக்கவோ அல்லது ஆற்றின் கரையோர பகுதி செல்லாமல் பாதுகாப்பாக இருக்கும்படி எச்சரிக்கப்படுகிறார்கள். மேலும், தாமிரபரணி ஆறு, கோரம்பள்ளம் குளம், உப்பாறு ஓடை மற்றும் அனைத்து நீர் நிலைகளிலும் பொதுமக்கள் மற்றும் கால்நடைகள் இறங்காதவாறு கிராம நிர்வாக அலுவலர்கள், கிராம உதவியாளர் மற்றும் ஊராட்சி செயலாளர் மூலம் கண்காணித்திட அனைத்து வட்டாட்சியர்கள் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர்களுக்கு அறிவுரைகள் வழங்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.

 

தூத்துக்குடி மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும்பொழுது மக்கள் தங்குவதற்கு ஏதுவாக 97 நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன. வருவாய்த்துறை, ஊரக வளர்ச்சித்துறை மற்றும் வேளாண்மை துறை அலுவலர்கள் அடங்கிய சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு அனைத்து பகுதிகளும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அனைத்து துறைகளும் வெள்ள தடுப்பு பணிகளுக்காக முழு வீச்சில் செயல்பட அறிவுறுத்தப்பட்டு களத்தில் செயல்பட்டு வருகிறது. 


வெள்ள மீட்பு பணிகளுக்காக தூத்துக்குடி மாவட்டத்தின் கடற்கரை கிராமங்களில் உள்ள 41 படகுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. 3000 முதல் நிலை பொறுப்பாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் தயார் நிலையில் உள்ளனர். 


மாவட்டம் முழுதும் உள்ள 639 குளங்களில் உள்ள நீர் இருப்பு, நீர் வரத்து முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. இவற்றில் 32 குளங்கள் 70 சதவீதத்திற்கும் மேல் நீர் நிரம்பி உள்ளன. ஒட்டப்பிடாரம் தாலுகாவில் உள்ள ஒட்டநத்தம் குளம், முரம்பன்குளம் 100% நீர் நிரம்பியுள்ளது. இதிலிருந்து வெளிப்படும் நீர்வரத்து முழுமையாக. கண்காணிக்கப்பட்டு வருகிறது என மாவட்ட ஆட்சியர் இளம்பகவத், தெரிவித்துள்ளார்.

  • Share on

கோவில்பட்டி சிறுவன் மர்ம மரணம் : கடம்பூர் ராஜூ எம்எல்ஏ பரபரப்பு குற்றச்சாட்டு!

தூத்துக்குடியை மிரட்டும் மழை.... ஆறு, குளங்களின் நீர் நிலவரம் எப்படி இருக்கு?

  • Share on