எட்டயபுரம் அருகே கத்தியை காட்டி மிரட்டி செல்போன் மற்றும் பைக்கை பறித்து வழிப்பறியில் ஈடுபட்ட 2பேரை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், எட்டயபுரம் அருகில் உள்ள துரைசாமிபுரத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் விக்னேஸ்வரன் (28). இவர் நேற்று மாலை சிந்தலக்கரையில் உள்ள மருந்து கடைக்கு சென்றுவிட்டு இருசக்கரவாகனத்தில் திரும்பி வந்து கொண்டிருந்தார். அப்போது, எட்டயபுரம் - துரைசாமிபுரம் சந்திப்பு சாலையில் வரும்போது 2 இளைஞர்கள் அவரது பைக்கை வழி மறித்து கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்து செல்போன் மற்றும் பைக்கை பறித்து சென்று விட்டனர்.
இந்த சம்பவம் குறித்து, எட்டயபுரம் காவல் நிலையத்தில் விக்னேஸ்வரன் அளித்த புகாரின் பேரில் போலீசார், அங்குள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். அதில், தூத்துக்குடி டிஎம்பி காலனியைச் சேர்ந்த குட்டியப்பன் மகன் சுரேஷ் (19), செல்லப்பா மகன் செல்வகுமார் (20) ஆகிய 2 பேர் வழிப்பறியில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்து செல்போன் மற்றும் பைக்கை பறிமுதல் செய்துனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.