மழையின் காரணமாக இன்று தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் அறிவித்துள்ளார்.
தென் மேற்கு அதனை ஒட்டிய தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக இலங்கை கடலோரப் பகுதிகளை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலைகொண்டுள்ளது. இது மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (டிசம்பர் 12) இலங்கை - தமிழக கடலோரப் பகுதிகளை அடையும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
இந்தநிலையில், இன்று கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ள சூழல் மற்றும் தொடர்ந்து பெய்து வரும் காரணத்தால், தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.