இந்திய விடுதலைப் போராட்ட வீரர் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மன் நினைவு கோட்டைக்கு செல்லும் சுற்றுலா வாகனங்களுக்கு நுழைவுக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், ஒட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றியம், பாஞ்சாலங்குறிச்சி ஊராட்சியில், இந்திய விடுதலைப் போராட்ட மாவீரர் வீரபாண்டிய கட்டபொம்மனின் நினைவு கோட்டை உள்ளது. இந்த கோட்டையை பார்வையிட உலகம் முழுவதும் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருவது வழக்கம். இவ்வாறு வரக்கூடிய சுற்றுலா பயணிகளின் வாகனங்களுக்கு 2001ஆம் ஆண்டு முதல் நாள் ஒன்றுக்கு பஸ் மற்றும் லாரிக்கு ரூபாய் 20-ம், வேனுக்கு ரூபாய் 10-ம், காருக்கு ரூபாய் 5-ம், டூவீலர்களுக்கு ரூபாய் 2-ம் என நுழைவு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், தற்போது சுற்றுலா வாகனங்களுக்கு ஊராட்சி தீர்மானம் மற்றும் வட்டார வளர்ச்சி அலுவலர் பரிந்துரையின் படி நுழைவு கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. இதன்படி நாள் ஒன்றுக்கு பஸ் மற்றும் லாரிக்கு ரூபாய் 100-ம், வேனுக்கு ரூபாய் 80-ம், காருக்கு ரூபாய் 50-ம், டூவீலருக்கு ரூபாய் 10-ம் என நுழைவுக் கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான நடவடிக்கை மேற்கொள்ள ஒட்டப்பிடாரம் வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ( கிராம ஊராட்சிகள் ) மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.
மேலும் எவ்வித முறைகேடுகளும் நடைபெறாமல், ஊராட்சியின் வசூல் செய்யப்படும் தொகைக்கு உடனே ரசீது போட வேண்டும் எனவும் மாவட்ட ஆட்சியர் இளம்பகவத் உத்தரவிட்டுள்ளார்.