தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில முதியவர் ஒருவர் தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது. ஆட்சியர் இளம்பகவர் பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அப்போது, மனு கொடுக்க வந்த முதியவர் ஒருவர் திடீரென தான் மறைத்து வைத்திருந்த பெட்ரோல் பாட்டிலை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதையடுத்து, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த சிப்காட் போலீசார் அவரை தடுத்து நிறுத்தி விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.
விசாரணையில், அவர் ஒட்டப்பிடாரம் சிலோன் காலனியைச் சேர்ந்த வேலு மகன் கருப்பசாமி என தெரியவந்தது. மேலும், இவரது மகன் ஹரிஹரன் என்பவரது மரணத்தில் மரமம் இருப்பதாக காவல் நிலையத்தில் புகார் அளித்தும் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லையாம். இதனால் அவர் ஆட்சியர் அலுவலகத்தில் தீக்குளிக்க முயன்றது தெரியவந்தது. தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தால் ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.