தூத்துக்குடி மாநகராட்சியில் காலி மனைகளில் தேங்கியுள்ள மழை நீரை அகற்றாவிட்டால் அபராதம் விதிக்கப்படும் என தூத்துக்குடி மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக மாநகராட்சி ஆணையர் மதுபாலன் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் ஒரு சில இடங்களில் அமைந்துள்ள காலி மனைகளில் முறையாக அதன் உரிமையாளர்களால் பராமரிக்கப்படாத காரணத்தினால், முட்புதர்கள் உருவாகி விஷ ஜந்துக்கள் தங்குமிடமாக மாறி வருவதோடு மட்டுமல்லாமல், தற்போது பெய்த வடகிழக்கு பருவமழையின் போது மேற்படி பகுதியில் மழை நீர் தேக்கமாகி பொது சுகாதாரத்திற்கும் பொது மக்களுக்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகிறது.
குறிப்பாக மேற்படி காலி மனைகளில் வளர்ந்துள்ள கோரை புற்களில் இருந்து வெளியாகும் பஞ்சானது பொதுமக்களுக்கு சுவாச கோளாறு ஏற்பட காரணமாக அமைந்து வருகிறது. ஆகவே மாநகரப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ள மிகவும் தாழ்வான பகுதிகளில் காணப்படும் 400 காலி மனைகளின் உரிமையாளர்களுக்கு மேற்படி மழை நீரை உடனடியாக அகற்றுமாறும், தங்களது சொந்த பொறுப்பில் முறையாக பராமரித்திடுமாறும் மாநகராட்சி சார்பில் அறிவிப்பு அனுப்பப்பட்டுள்ளது.
மேற்படி காலி மனைகள் அதன் உரிமையாளர்களால் உரிய நடவடிக்கை எடுக்காத பட்சத்தில் மாநகராட்சி நிர்வாகம் தாமாகவே முன்வந்து இடத்தினை தூய்மைப்படுத்தி அதற்கான செலவின தொகையினை தொடர்புடைய உரிமையாளர்களிடமிருந்து வசூலிப்பதோடு, திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் அபராதமும் விதித்திட திட்டமிடப்பட்டுள்ளது. எனவே காலி மனையில் தேங்கியுள்ள மழை நீரினை தொடர்புடைய உரிமையாளர்கள் முற்றிலுமாக அகற்றி மாநகராட்சியின் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்கி அபராதம் மற்றும் இதர நடவடிக்கைகளை தவிர்த்திடுமாறு ஆணையர் தெரிவித்துள்ளார்.