தூத்துக்குடி தென்பாகம் பெண் காவலரை சங்கரன்கோவிலில் கோவில் உண்டியல் பணத்தைத் திருடிய புகாரில் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்
தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் அருள்மிகு சங்கரநாராயண சுவாமி கோவிலில் உண்டியல் காணிக்கை பணம் எண்ணும் பணி கடந்த நவ.,26ல் நடைபெற்றது. அப்போது, தூத்துக்குடி தென்பாகம் காவலர் மகேஸ்வரி (42) உள்ளிட்ட 4 பெண்கள் பணத்தைத் திருடியது தெரியவந்தது. இந்த புகாரின்பேரில், சங்கரன்கோவில் போலீசார் வழக்குப் பதிந்து 4 பேரையும் கைது செய்தனர்.
இதுகுறித்து தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் விசாரணை நடத்தி தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆல்பர்ட் ஜானிடம் அறிக்கையை சமர்ப்பித்தார். அதன்பேரில், காவலர் மகேஸ்வரியை பணியிடை நீக்கம் செய்து தூத்துக்குடி மாவட்ட எஸ்பி உத்தரவிட்டார்.