தூத்துக்குடியில் இருந்து இலங்கைக்கு போதை பொருள் கடத்த முயன்ற எட்டு பேருக்கு 10 ஆண்டுகள் சிறைதண்டனை வழங்கி மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது.
கடந்த 2022ஆம் ஆண்டு தூத்துக்குடி மாவட்டம், வேம்பார் கடற்கரையிலிருந்து இலங்கைக்கு கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் என்ற போதை பொருள் கடத்த முயன்றதாக தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் கடத்தலில் ஈடுபட்ட தூத்துக்குடியைச் சேர்ந்த இருதயவாசு ( 43 ), கிங்பன் ( 25 ), சிலுவை ( 44 ), அஸ்வின் ( 26 ), சுபாஷ் ( 26 ), கபிலன் ( 22 ), சைமன் முத்து ( 29 ), ராமநாதபுரம் மாவட்டம் பாம்பனைச் சேர்ந்த வின்ஸ்டன் ( 25 ) ஆகியோரை தூத்துக்குடி போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் கைது செய்து அவர்களிடமிருந்து 9.985 கிலோ கிரிஸ்டல் மெத்தம் பெட்டமைன் போதைப்பொருளை கைப்பற்றினர்.
மதுரை முதன்மை போதைப்பொருள் தடுப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கில், அரசு தரப்பில் வழக்கறிஞர் தங்கேஷ்வரன் ஆஜரானார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி எம்.செங்கமலச்செல்வன் நேற்று தீர்ப்பளித்தார். இதில் கடத்தலில் ஈடுபட்ட அனைவருக்கும் தலா 10 ஆண்டு சிறை தண்டனை வழங்கியும், அனைவருக்கும் தலா ஒரு லட்சம் அபராதம் விதித்தும் உத்தரவிட்டார்.