தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் , ஆட்சியர் அலுவலக முற்றுகை போராட்டம் நடத்த, தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்ற செயற்குழு கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
13.02.2021 அன்று தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் அலுவலகத்தில் மன்றத்திற்கான செயற்குழு கூட்டம் நடைபெற்றது. அந்த கூட்டத்தில் வருகின்ற 16.02.2021-ந் தேதி நாளை மறுநாள் தமிழக முதல்வர் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் கவனத்தை ஈர்க்கும் வகையில் அன்று காலை 10.30 மணிக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தை முற்றுகை செய்யும் போராட்டம் நடத்த வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
பத்திரிக்கையாளர்களுக்கு சலுகை விலையில் வழங்கும் வீட்டுமனை பட்டா தமிழகம் முழுவதிலும் பெரும்பாலான பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த 15 வருடங்களாக தூத்துக்குடி பத்திரிக்கையாளர் மன்றம் சார்பில் மானிய விலையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டு வருகிறது.
அதனடிப்படையில் மாவட்ட நிர்வாகத்தின் வழிகாட்டலின் படி அடையாளம் காட்டப்பட்ட இடத்திற்கு தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்றம் சார்பில் பொது பாதைக்கான நிலத்தை வாங்கி, தமிழக ஆளுநர் பெயரில் பத்திரம் பதிவும் செய்து, முந்தைய மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரியிடம் 2019 டிசம்பரிலேயே கொடுக்கப்பட்டுவிட்டது. அதன் பிறகு வருவாய்துறை அதிகாரிகள் பத்திரிக்கையாளர் அனைவரிடமும் விசாரணை மேற்கொண்டு ஓராண்டிற்கு மேலாகிவிட்டது. ஆனாலும் இதுவரை தூத்துக்குடி பத்திரிகையாளர் மன்ற உறுப்பினர்களுக்கு வீட்டுமனை பட்டா கிடைக்கப்பெறவில்லை.
தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் இலவச வீட்டுமனை பட்டா மற்றும் மானிய விலையில் வீட்டுமனை பட்டா வழங்கப்பட்டு வரும் நிலையில் தூத்துக்குடியில் 15 ஆண்டுகளாக கோரிக்கை கிடப்பில் கிடப்பது வேதனை அளிக்கிறது என்கிறார்கள் பத்திரிக்கையாளர்கள்.
இந்தநிலையில் தேர்தல் பிரசாரத்திற்காக தூத்துக்குடிக்கு தமிழக முதல்வர் வரும் 17-ந் தேதி வரவுள்ள நிலையில் அவரின் கவனத்தை ஈர்க்கும் வகையில் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்த வேண்டும் என நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர்.
இந்த கூட்டத்தில் பத்திரிக்கையாளர் மன்ற தலைவர் சண்முகசுந்தரம், செயலாளர் இசக்கிராஜா, இணைசெயலாளர் சிதம்பரம் உள்ளிட்ட நிர்வாகிகள், உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடிக்கு வரும் தமிழக முதல்வர் பத்திர்க்கையாளர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பது பத்திரிக்கையாளர்களின் கோரிக்கையாகும்.