தூத்துக்குடி மாநகர பகுதிகளில் சாலைகளில் சுற்றித்திரியும் மாடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருவதால் சாலையில் பயணம் மேற்கொள்பவர்கள் ஒருவித அச்சத்துடனேயே பயணத்தை மேற்கொள்கின்றனர்.
தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளை சுற்றி மாடு வளர்க்கும் உரிமையாளர்கள் தங்களது மாட்டை மேய்ச்சலுக்கு விட்டு விடுகின்றன. மாடுகளோ தன் கால் போன போக்கிலே போய் சாலைகளில் கிடக்கும் உணவுகளை சாப்பிட்டு விட்டு சாலைகளின் நடுவே மற்றும் சாலையின் ஓரத்தில் ஓய்வெடுக்க ஆரம்பித்து விடுகின்றனர்.
இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. மேலும், இரவு நேரத்தில் இருள் சூழந்த பகுதியில் மாடுகள் நிற்கின்றது. இதை கவனிக்காமல் வரும் வாகன ஓட்டிகள், எதிர்பாராத விதமாக மாட்டின் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். குறிப்பாக, இருசக்கர வாகனத்தில் செல்வோர் சுற்றி திரியும் மாடுகளால் விபத்தில் சிக்கும் நிலை உள்ளதாக பொதுமக்கள் கூறுகின்றனர்.
பொது மக்கள் தங்களது கால்நடைகளை பொது இடங்களில் சுற்றி திரிய விட்டால் அபராதம் விதிக்கப்படும் என மாநகராட்சி சார்பில் தொடர்ந்து எச்சரிக்கை கொடுக்கப்பட்டு, அறிவுறுத்தப்பட்டு வருகிறது. இருப்பினும் ஆங்காங்கே போக்குவரத்திற்கும், பொதுமக்களுக்கும் இடையூறாக சாலையில் மாடுகள் சுற்றித்திரிந்த வண்ணம் தான் உள்ளது.
இந்தநிலையில், தூத்துக்குடி பாளை., ரோட்டில் நேற்று இரவு போக்குவரத்துக்கு இடையூறாக சுற்றி திரிந்த 18 மாடுகளை மேற்கு மண்டல சுகாதார ஆய்வாளர் ராஜபாண்டி தலையிலான மாநகராட்சி பணியாளர்கள் பிடித்து தூத்துக்குடி மாநகர கோசாலையில் ஒப்படைத்துள்ளனர்.