குளத்தூர் அருகே கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட 2 இளைஞர்களை போலீசார் கைது செய்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் தாலுகா, குளத்தூர் காவல் நிலைய உதவி ஆய்வாளர் முத்துராஜா மற்றும் போலீசார் பனையூர் கிழக்கு கடற்கரை சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, அந்த வழியில், சந்தேகப்படும்படியாக பைக்கில் நின்றிருந்த இருவரை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் கல்லூரணி தெற்கு தெருவை சேர்ந்த கணபதி மகன் பார்த்திபன் ( 24 ), கொத்தால சிங்கராஜ் மகன் அரவிந்தன் ( 22 ) என்பதும், இருவரும் தூத்துக்குடியில் உள்ள நபரிடம் கஞ்சா பொட்டலங்களை விலைக்கு வாங்கி வந்து, இங்கு சிறு சிறு பொட்டலங்களாக பிரித்து விற்பதும் தெரிய வந்தது. இதனையடுத்து, வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்த போலீசார் பைக் மற்றும் 110 கிராம் கஞ்சா பொட்டலங்களையும் பறிமுதல் செய்தனர். பின்னர் இருவரையும் விளாத்திகுளம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி தூத்துக்குடி பேரூரணி சிறையில் அடைத்தனர்.