தூத்துக்குடி மதுரா கோட்ஸ் மில் தொடர்ந்து இயங்கி வருவதாகவும், சமூக வலைதளங்களில் பரவும் போலித் தகவல்களை தொழிலாளர்கள் உட்பட யாரும் நம்ப வேண்டாம் என ஆலை தரப்பிலும், தொழிற்சங்கத்தினரும் தெரிவித்துள்ளனர்.
தூத்துக்குடி வடக்கு பீச் ரோட்டில் மதுரா கோட்ஸ் மில் இயங்கி வருகிறது. நூறாண்டுகளை கடந்து தமிழகத்தில் மேலும் சில இடங்களில் இயங்கி வரும் இந்த மில்லில் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் வேலை செய்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த இரண்டு நாட்களாக தூத்துக்குடி மில் மூடப்படுவதாக சமூக வலைதளங்களில் தகவல்கள் வேகமாக பரவியது. இதனை ஆலை தரப்பினரும், தொழிற்சங்கத்தினரும் மறுத்துள்ளனர்.
தூத்துக்குடியில் மதுரா கோட்ஸ் ஆலை தொடர்ந்து இயங்கி வருகிறது எனவும், பகல் நேரம் முழுவதும் ஆலை தேவையை பொறுத்து வழக்கம்போல் இயக்கப்பட்டு வருகிறது என்று ஆலை தரப்பினரும் தொழிற்சங்க நிர்வாகிகளும் தெரிவிக்கின்றனர். மேலும், மதுரா கோட்ஸ் ஆலை மூடப்பட்டதாக சமூக வலைதளங்களில் வரும் வதந்திகளை தொழிலாளர்கள் உள்ளிட்ட யாரும் நம்ப வேண்டாம். தூத்துக்குடியின் முக்கிய அடையாளமாக விளங்கும் ஆலை தொடர்ந்து இயக்கத்தில் உள்ளது என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.