தூத்துக்குடியில் நடைபெற்ற அதிமுக கூட்டத்தில் முன்னாள் எம்எல்ஏ நீலமேக வர்ணதிற்கு நேர்ந்த அந்த நிலையை கண்ட அதிமுக நிர்வாகிகள் சிலர் முன்னாள் எம்எல்ஏவிற்காக இந்த நிலை என மனம் நொந்துகொண்டனர்.
அதிமுகவில் கட்சி அமைப்புகளின் பணிகள், செயல்பாடுகள் குறித்து, நேரடியாக கள ஆய்வு செய்யப்பட்டு, அவற்றின் பணிகளை மேம்படுத்துவது குறித்து கருத்துகளை வழங்க கள ஆய்வுக் குழுவை அமைத்து அதிமுக பொதுச் செயலாளரும், முன்னாள் முதல்வருமான எடப்பாடி பழனிச்சாமி உத்தரவிட்டிருந்தார். அதன் அடிப்படையில், 10 முன்னாள் அமைச்சர்கள் அடங்கிய இந்தக் குழுவினர், மாவட்டம் வாரியாக சென்று கட்சிப் பணிகள் தொடர்பான கள ஆய்வில் ஈடுபட்டு வருகின்றனர்.
அவ்வாறு, தென்மாவட்ட கள ஆய்வு குழு பொறுப்பாளர்களான முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மற்றும் செம்மலை ஆகியோர் திருநெல்வேலி, மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் கள ஆய்வு கூட்டம் நடத்தி கட்சியினரிடையே கருத்துக்களை கேட்டு ஆலோசனை நடத்தியுள்ளனர்.
இதில், திருநெல்வேலி, கும்பகோணம், மதுரை உள்ள பகுதிகளில் நடந்த அதிமுக களஆய்வுக் குழு கூட்டத்தில் இரு தரப்பாக சொந்த கட்சிக்குள்ளே மோதிக்கொண்டு அடிதடியில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனால், அதிமுக கள ஆய்வு கூட்டம்னாலே அதகளமாகிவிடும் என்று கூட்டத்தின் பெயர் ரிர்பேராக்கிவிட்டது. ஆகவே, இந்த நிலை தூத்துக்குடியில் ஏற்பட கூடாது என மிகவும் தெளிவாக பொறுப்பாளர்கள் கையாண்டாளும் அதை தவிடுபொடியாக்கும் விதமாக தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கூட்டத்தில் ஒரு சம்பவம் நடந்துள்ளது கட்சியினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது, தூத்துக்குடி தெற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட கிளைக் கழகம், வார்டு, வட்டக் கழகங்களின் செயல்பாடுகள் மற்றும் கட்சி வளர்ச்சிப் பணிகள் குறித்த கள ஆய்வுக் கூட்டம் நேற்று ( நவம்பர் 30 ) சனிக்கிழமை மாலை தூத்துக்குடி மணிநகர் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மாவட்ட செயலாளர் எஸ்.பி.சண்முகநாதன் தலைமையில் நடைபெற்றது. அதிமுக துணை பொதுச்செயலாளரும், திண்டுக்கல் கிழக்கு மாவட்ட செயலாளருமான நத்தம் விஸ்வநாதன் எம்எல்ஏ, அமைப்பு செயலாளர் செம்மலை ஆகியோர் கலந்துகொண்டு ஆலோசனை வழங்கி பேசினர்.
கூட்டத்தில், தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் மாவட்ட சார்பு அணிகளின் செயலாளர், மாவட்ட, ஒன்றிய, நகர, பேரூராட்சி பகுதி அளவில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பலரும் கலந்து கொண்டனர்.
இந்த கூட்டத்தின் மேடையில், சாத்தான்குளம் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேக வர்ணத்திற்கு உட்கார இருக்கை இன்றி பின்னால் நின்றிருந்தை கண்ட கீழே இருந்த கட்சியினர் அதிர்ச்சியடைந்தனர். முன்னாள் எம்எல்ஏவிற்கே இந்த நிலையான என மனம் நொந்து கொண்டனர்.
நீலமேக வர்ணம் ( படத்தில் வட்டமிட்டு காட்டப்பட்டுள்ளவர் )
தமிழக அரசியல் வரலாற்றிலேயே ஒரு சாதாரண அடிப்படை தொண்டன் கூட ஒரு எம்எல்ஏ, எம்பி பதவியை அலங்கரிக்க முடியும் என்ற நிலை உள்ள ஒரே கட்சி அது அதிமுக மட்டும் தான். அதனால் தான் அதிமுக கட்சியில் 1 1/2 கோடிக்கும் மேலான தொண்டர்கள் இருந்து வருகிறார்கள். அப்படி, ஒரு எளிய தொண்டனுக்கு கூட உரிய முக்கியத்துவம் கொடுக்கும் இந்த அதிமுகவில் ஒரு முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு உட்கார இருக்கை கூட தராமல் நிற்க வைத்த அவலத்தை கண்ட உண்மையான அதிமுக தொண்டர், நிர்வாகிகள் மனம் கொதித்துள்ளனராம். அம்மா ( ஜெயலலிதா ) இருந்திருந்தால் இப்படியெல்லாம் நடக்குமா என்று பொங்குகின்றனர் அவர்கள்.
யார் இந்த நீலமேக வர்ணம்?
கடந்த 2003ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் ஜெயலலிதா முதல்வராக இருந்த காலம். அப்போது, தூத்துக்குடி மாவட்டம், சாத்தான்குளம் தொகுதியில் இடைத் தேர்தல் நடைபெற்றது. நாடு சுதந்தரம் பெற்றதிலிருந்தே இந்தத் தொகுதி காங்கிரஸ் கோட்டையாக இருந்து வருகிறது. அதன் பின்னர், தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தான் இங்கே வெற்றி பெற்றது. அதை உடைத்து முதல் முறையாக அதிமுக வேட்பாளர் ஒருவரைப் போட்டியிட வைத்தார் ஜெயலலிதா. ஒரு சாதாரண விவசாயியாக இருந்த நீலமேக வர்ணம் என்பவரை தேர்வு செய்து அறிவித்தார் ஜெயலலிதா. நீலமேக வர்ணம் காங்கிரஸ் வேட்பாளர் மகேந்திரனை 17 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவச் செய்தார்.
அந்த தொகுதியில் வேட்பாளர் யாரென தெரியாமல் சுவரில் கட்சிசின்னம் வரைந்து கொண்டிருந்த தீவிர அதிமுக தொண்டராக இருந்த 5ஆம் வகுப்பு வரை மட்டுமே படித்திருந்த விவசாயி நீலமேகவர்ணத்தை வேட்பாளராக நிறுத்தினார் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா.
தொடர்ந்து அவருக்காக 7 நாட்கள் தீவிர பிரச்சாரத்தை மேற்கொண்டு நீலமேகவர்ணத்தை வெற்றி பெற செய்தார் ஜெயலலிதா. ஆனால், கடந்த 2007 ஆம் ஆண்டு, தொகுதி மறுசீரமைப்பில் சாத்தான்குளம் தொகுதி கலைக்கப்பட்டு, ஸ்ரீவைகுண்டம், திருச்செந்தூர் தொகுதிகளுடன் இணைக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவரால் மீண்டும் தேர்தலில் நிற்க முடியவில்லை
நீலமேகவர்ணம் எம்.எல்.ஏவாக இருந்தபோது பைக்கில் சட்டசபை கூட்டத்திற்குப் போயியுள்ளார். இதனை அறிந்த ஜெயலலிதா டொயோட்டா குவாலிஸ் வாங்கி கொடுத்துள்ளார். அந்த காரை இன்னமும் ஜெயலலிதா நினைவாக பத்திரமாகப் பாதுகாத்து வருகிறார். நான் இருக்கும் வரை இந்த வண்டியும் பத்திரமாக இருக்கும் என்கிறார் நீலமேக வர்ணம்.
இவ்வாறு ஜெயலலிதாவிடம் தனி கவனம் பெற்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் நீலமேக வர்ணம் தான், நேற்று தூத்துக்குடி அதிமுக தெற்கு மாவட்ட கள ஆய்வு கூட்டத்தில் யார் கவனமும் இன்றி நிற்க வைக்கப்பட்டுள்ளார் என்பது தான் காலத்தின் வேதனை. அரசியலின் அதிர்ச்சி. மாவட்ட செயலாளர் சண்முகநாதனின் மெத்தன போக்கு என்கின்றனர் உள்ளூர் அரசியல் அறிந்தவர்கள்.