தூத்துக்குடியில் பூட்டியிருந்த வீட்டை உடைத்து 12 பவுன் நகைகளை திருடிச் சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
தூத்துக்குடி ஆதிபராசக்தி நகரைச் சேர்ந்தவர் முகம்மது யூசுப் மனைவி ரபியா கத்தூன் (44). முகம்மது யூசுப் துபாயில் வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில், இவர் கடந்த 28ஆம் தேதி விமானம் மூலம் திருவனந்தபுரம் வந்துள்ளார். அவரை அழைத்து வருவதற்காக ரபியா கத்தூன் வீட்டை பூட்டிவிட்டு திருவனந்தபுரம் சென்றுள்ளார். பின்னர், நேற்று மாலை அவர்கள் ஊர் திரும்பினர்.
அப்போது, அவர்களது வீட்டின் கதவில் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது கண்டு அதிர்ச்சியடைந்த அவர்கள் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் வைத்திருந்த 12 பவுன் தங்க நகைகள் திருடு போயிருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, அவர்கள் தூத்துக்குடி சிப்காட் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் பேரில் காவல் ஆய்வாளர் சைரஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.