தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டை சேர்ந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத் தேவன் வாரிசுகள் 80க்கும் மேற்பட்டோர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்தில் இலவச பட்டா கேட்டு கோரிக்கை மனு அளித்தனர்.
தூத்துக்குடி மாவட்டம், வல்லநாட்டை சேர்ந்த இந்திய சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத் தேவன். இவர் பாஞ்சாலங்குறிச்சி வீரபாண்டிய கட்டபொம்மனின் படைத் தளபதிகளில் ஒருவராக விளங்கினார். இவரது நினைவாக வல்லநாட்டில் அரசு சார்பில் மணிமண்டபம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், அவரது வாரிசுகள் சுமார் 150 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வல்லநாட்டில் வசித்து வருகின்றனர். அவர்கள் அனைவருக்கும் வெள்ளையத் தேவன் மணிமண்டபம் அருகே உள்ள காலி இடங்களில் இலவச வீட்டு மனை மற்றும் பட்டா வழங்க வேண்டும் என கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், சுதந்திர போராட்ட வீரர் வெள்ளையத் தேவனின் வாரிசுகள் சுமார் 80 பேர் ஸ்ரீவைகுண்டம் தாலுகா அலுவலகத்திற்க திரண்டு வந்து கோரிக்கை மனு அளித்தனர்.
அந்த கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-
வல்லநாட்டில் எங்களது முப்பாட்டன் வீரர் வெள்ளையத் தேவன் இந்திய சுதந்திர போராட்டத்திற்காக வீர மரணம் அடைந்துள்ளார். அவரது வாரிசுதார்களாக ஊரில் 150 குடும்பங்கள் நாங்கள் உள்ளோம்.
எங்களுக்கு தமிழக அரசில் இருந்து எந்தவித சலுகைகளும் இதுநாள் வரை கிடைக்கவில்லை. எங்கள் குடும்பத்தில் கனவரால் கைவிடப்பட்ட பெண்கள் அதிகமாக உள்ளளர். எங்களுக்கு சொந்த வீடு எதுவும் இல்லை. வெள்ளையத் தேவன் மணி மண்டபத்தின் அருகில் சுமார் 1.5 ஏக்கர் காலி மனை உள்ளது. அதில் எங்களுக்கு இலவச வீட்டுமனை மற்றும் பட்டா வழங்குவதற்கு நடவடிக்கை வேண்டும். இவ்வாறு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
மனுவை பெற்றுக் கொண்ட தாசில்தார் ரத்னசங்கர், வெள்ளையத் தேவன் வாரிசுகளின் தகுதி வாய்ந்த நபர்கள் குறித்தும் பட்டா வழங்குவதற்கான இடம் குறித்தும் உரிய ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.