தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தன்னுடைய ஆதரவை வாழை பட நட்சத்திரம் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் முன்னணி நடிகராக விளங்கிவரும் விஜய், சமீபத்தில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரில் அரசியல் கட்சியை தொடங்கினார். இதையடுத்து, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் அரசியல் மாநாடு விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டியில் கடந்த மாதம் (அக்டோபர்) 27 ஆம் தேதி பிரமாண்டமாக நடைபெற்றது. மாநாட்டில் விஜய்யின் திராவிடம், தமிழ் தேசியம் இரு கொள்கை, ஆட்சியில் பங்கு போன்ற பரபரப்பான பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
மாநாட்டை தொடர்ந்து, வரக்கூடிய 2026 சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள தமிழக வெற்றிக்கழகம் தயாராகி வருகிறது. அதற்கேற்ப விஜய் அரசியல் வியூகங்களை அமைத்து வருகிறார். மற்றொரு பக்கம் தமிழக வெற்றிக்கழகத்தை அனைத்து நிலைகளிலும் பலப்படுத்தும் பணியையும் அவர் தொடங்கி உள்ளார். அதன் தொடர்ச்சியாக, கட்சியில் உறுப்பினர் சேர்க்கை, மாற்று கட்சியினரை தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தல் பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் தான், இயக்குநர் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் வெளிவந்த "வாழை" திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரமாக நடித்த பொன்வேல் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர் அஜிதா ஆக்னல் முன்னிலையில் தமிழக வெற்றிக்கழகத்திற்கு தன்னுடைய ஆதரவை தெரிவித்துள்ளாராம். வாழை திரைப்படத்தில் சிவனைந்தனாக பொன்வேல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.