தூத்துக்குடி மாநகரப் பகுதிகளில் கடந்த சில நாட்களாக செல்போன் பறிப்பு சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளனர்.
செல்போனில் பேசிய படியே சாலையோரங்களில் நடந்து செல்பவர்கள் பின்னால் பைக்குகளில் வந்து கண்ணிமைக்கும் நேரத்தில் செல்போனை பறித்து தப்பிச் செல்லும் திருட்டு கும்பல் ஒருபுறமும், பணிகள் முடித்து இரவு நேரத்தில் தனியாக வரக்கூடியவரிடம் கத்தி மற்றும் அரிவாளை காண்பித்து மிரட்டி செல்போன் மற்றும் பணத்தை பறித்துச் செல்லும் மற்றொரு கும்பலும் என தூத்துக்குடியில் வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டுகின்றனர். இதனால் சாலை ஓரத்தில் செல்போன் பேசிக் கொண்டு நடந்து செல்லவே பொதுமக்கள் கலக்கமடைந்துள்ளனர்.
இந்த நிலையில, நேற்று முன்தினம் மாலை தூத்துக்குடி ஜார்ஜ் ரோடு பகுதி சேர்ந்த மாரியம்மாள் ( 42 ) என்ற பெண், மத்திய அரசு ஊழியர் குடியிருப்பு பகுதியில் சென்ற போது ஒரே பைக்கில் வந்த மூன்று வாலிபர்கள் அவரது செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். உடனே அவர் சுதாரித்துக்கொண்டு கூச்சலிட்டதால் திருட்டு கும்பல் செல்போன் பறிக்கும் முயற்சியை கைவிட்டு விட்டு தப்பியுள்ளனர். இது குறித்து தென்பாகம் காவல் நிலைய போலீசார் விசாரித்து, தூத்துக்குடி கருணாநிதி நகரை சேர்ந்த சுதாகர் மகன் கார்த்திக் ( 24 ), சத்யா நகரை சேர்ந்த சதாசிவம் மகன் பாரதி ( 25 ), மற்றும் ஸ்ரீவைகுண்டம் பகுதியைச் சேர்ந்த பேச்சி முத்து மகன் சுரேஷ் ( 20 ) ஆகிய மூன்று பேரையும் கைது செய்தனர். இவர்கள் மீது ஏற்கனவே சில திருட்டு வழக்குகள் நிலுவையில் உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் பிடிபட்டவர்களிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.