அதிமுக 53ஆவது ஆண்டில் அடியெடுத்து வைப்பதைக் கொண்டாடும் வகையில் கடந்த அக்டோபர் மாதம் சென்னையில் உள்ள கட்சித் தலைமை அலுவலகத்தில் கட்சி கொடி ஏற்றப்பட்டு, ஏழை எளியோருக்கு பொதுச் செயலாளர் எடப்பாடி கே.பழனிசாமி நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
இந்த நிலையில், தூத்துக்குடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பன் என்பவர் தூத்துக்குடி முத்துநகர் பீச் அண்ணா தொழிற்சங்க ஆட்டோ ஓட்டுநர் சங்கத்தின் செயலாளராக உள்ளார். இவர் வாடகைக்கு ஆட்டோ எடுத்து தொழில் செய்து வந்துள்ளார்.
மேலும், இவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு தூத்துக்குடி தெற்கு மாவட்ட அதிமுக செயலாளர் சண்முகநாதன் பரிந்துரையின் பேரில், கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, நலிந்த தொழிலாளர்களுக்கான நிதி உதவியின் கீழ் தூத்துக்குடி ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பனை நேரில் வரவழைத்து ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கி உதவியுள்ளனர்.
இதனையடுத்து, அந்த பணத்தின் மூலம் தனது பெயரில் சொந்தமாக ஓர் ஆட்டோ வாங்கி தற்போது அதன் மூலமாக தொழில் செய்து வருகிறார். தனக்கு அதிமுக சார்பாக வழங்கப்பட்டுள்ள இந்த உதவிக்காக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட செயலாளர் சண்முகநாதன் மற்றும் கட்சியினருக்கு தனது நன்றியை தெரிவித்துள்ளார் ஆட்டோ ஓட்டுநர் அய்யப்பன்.