திருச்செந்தூரில் பாகன் உட்பட 2 பேரை தாக்கிய கோவில் யானை தெய்வானை, 11 நாட்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து தற்போது வெளியே வந்துள்ளது.
தூத்துக்குடி மாவட்டத்தில், முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடாக இருக்கும் திருச்செந்தூர் முருகன் கோவிலில் 26 வயது தெய்வானை யானை ஒன்று கோவில் வளாகத்திலேயே வளர்க்கப்பட்டு வருகிறது
இந்நிலையில், கடந்த 18 ஆம் தேதி பாகனின் உறவினர் சிசுபாலன் என்பவர் யானை முன்பு நீண்ட நேரம் செல்பி எடுத்துவிட்டு யானையை தொட முயன்றுள்ளாராம். புதிதாக ஒருவர் தன்னை தொடுவது பிடிக்காததால் தெய்வானை யானை அவரை கால் மிதித்து தும்பிக்கையால் தாக்கியது. இதனை தடுக்க வந்த பாகன் உதயகுமாரையும் யானை தாக்கியதில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
திருச்செந்தூர் முருகன் கோவில் தெய்வானை யானை மிகவும் அமைதியான யானையாம். இவ்வாறு இருக்க பாகனை கொன்ற பின் தெய்வானை யானை சாப்பிட மறுத்து வந்ததாக கூறப்பட்டது. பின்னர் யானையானது சகஜ நிலைக்கு திரும்பியதாம்.
இதனையடுத்து, யானை தனிமைப்படுத்தப்பட்டு வனத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் யானையை தொடர்ந்து கண்காணித்து வந்தனர். இந்த நிலையில் தான், திருச்செந்தூரில் பாகன் உட்பட 2 பேரை தாக்கிய கோவில் யானை தெய்வானை, 11 நாட்கள் தொடர் மருத்துவக் கண்காணிப்பில் இருந்து இன்று வெளியே வந்துள்ளது.
அதிகாலையிலேயே யானையை குளிப்பாட்டி நவதானிய உணவுகள் வழங்கப்பட்டது. தற்போது திருச்செந்தூர் கோவில் யானை தெய்வானை உண்டு மகிழ்ந்து வருவதாக கோயில் நிர்வாகிகள் கூறுகின்றனர் . மேலும் யானை இருந்த இடத்தில் புனித நீரானது தெளிக்கப்பட்டது. அப்போது யானை மீதும் அந்த நீரானது தெளிக்கப்பட்டது.
புத்தாக்க முகாமிற்கு யானையை அனுப்ப வேண்டும் என்று இருந்த நிலையில் யானை நலமுடன் இருப்பதால் உணவுகளும் முறையாக எடுத்துக்கொள்வதால் யானையை அனுப்ப தேவையில்லை என்றும் வனத்துறை அதிகாரிகளும், மருத்துவர்களும் கூறியதாக தெரிகிறது.