லட்சத்தீவுகள் அருகில் கைது செய்யப்பட்ட தூத்துக்குடி மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கனிமொழி எம்பி மத்திய அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தார்.
திமுக துணைப் பொதுச் செயலாளரும், தூத்துக்குடி எம்பியுமான கனிமொழி கருணாநிதி இன்று டெல்லியில் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து கடிதம் அளித்தார். அதில், "தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே அயன் பொம்மையபுரத்தை சேர்ந்த மீனவர் அண்ணாதுரை கொச்சி துறைமுகத்திலிருந்து கடந்த நவம்பர் 14ஆம் தேதி மீன்பிடிக்கச் சென்றுள்ளார்.
அவர் குஜராத் மாநிலம் போர் பந்தரிலிருந்து 100 நாட்டிகல் மைல் தொலைவில் கடலில் தவறி விழுந்துள்ளதாகத் தகவல் கிடைத்துள்ளது. அவரை போர்க்கால அடிப்படையில் மீட்க வலியுறுத்தியும், லட்சத்தீவு கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி தருவைக்குளம் பகுதியைச் சேர்ந்த 10 மீனவர்களை உடனடியாக விடுவிக்கவும் விரைந்து நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார்.