வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் காரணமாக தூத்துக்குடி உட்பட தமிழகத்தில் 9 துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது இன்று மாலை ஃபெங்கல் புயலாக வலுப்பெற உள்ளது. இந்த புயல் தமிழகத்தை நோக்கி வரும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. எனவே, 29ஆம் தேதி வரை புயலாக நீடிக்கும் என்றும் 30ஆம் தேதி அதிகாலை ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவிழக்கும் என்றும் வானிலை மையம் கணித்துள்ளது.
இதன் காரணமாக, தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் நல்ல மழை ?பெய்யும் என்றும் வானிலை மையம் எச்சரித்துள்ளது. இந்நிலையில் இந்த புயல் காரணமாக 9 துறைமுகங்களில் 3ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்ற வானிலை மையம் அறிவுறுத்தியுள்ளது.
அதன்படி, சென்னை, கடலூர், நாகை, எண்ணூர், காட்டுப்பள்ளி, புதுச்சேரி, காரைக்கால், பாம்பன், தூத்துக்குடி துறைமுகங்களில் 3 ஆம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
தற்போது தென் கிழக்கு வங்கக்கடலில் உள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு 13 கி.மீ. வேகத்தில் நகர்ந்து வருகிறது. இவை புயலாக மாறிய பின் தமிழக கடலோர பகுதிகளை நெருங்கும் இந்த புயலால், தமிழக கடலோர பகுதிகளில் பலத்த காற்று வீசும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. தற்போது இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நாகையில் இருந்து 370 கிலோ மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 470 கிலோ மீட்டர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது.